மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் டி வில்லியர்ஸ் அவுட் ஆனதை பொறுத்துக்கொள்ளமுடியாமல், அவரது மகன் செய்த செயல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  


ஏபி டிவில்லியர்ஸின் மனைவி டேனியல்லே மற்றும் குழந்தைகள் நேற்று இரவு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டியைப் பார்க்க வந்திருந்தனர்.


ஏபிடியின் மூத்த மகன் தனது தந்தையை உற்சாகப்படுத்த நின்றார். ஆனால் அவர் அவுட் ஆன பிறகு ஏமாற்றமடைந்தார். அந்தச் சமயத்தில், அப்பா அவுட் ஆனதால், மகன் நாற்காலியில் கையை குத்தினார். மகன் காயமடைவதையும், அவனது தாய் நாற்காலியில் அடிப்பதைத் தடுக்க முயலும் வீடியோவும் வைரலாகியுள்ளது. பும்ரா பந்தில் டிவில்லியர்ஸ் 11 (6) ரன்களில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


 






துபாய் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது.  முதலில் பேட்டிங் செய்த பெங்களுரு 165 ரன்கள் எடுத்தது. இலக்கை சேஸ் செய்த மும்பை அணிக்கு, ரோஹித், டி-காக் சிறப்பான ஓப்பனிங் கொடுத்தனர். ஆனால், அவர்களை அடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் யாரும் இரட்டை இலக்கில் ரன்களை எட்டாமல் அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். 79/2 என்ற நிலையில் இருந்து 111/10 என்ற நிலையை எட்டியது மும்பை. 32 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து சட்டென்று சரிந்தது மும்பை அணி.


பெங்களூரு அணி பவுலர்களைப் பொருத்தவரை, ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்டுகளும், சஹால் 3 விக்கெட்டுகளும், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளும், சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தனர். ஆர்சிபியின் சிறப்பான பவுலிங் பர்ஃபாமென்ஸ், மும்பையை அணி பேட்டர்களை திக்குமுக்காட வைத்தது.


ஹர்ஷல் வீசிய 17வது ஓவரில், ஹர்டிக் பாண்டியா, பொல்லார்டு, ராகுல் சஹார் என அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் எடுத்து இந்த சீசனின் முதல் ஹாட் - ட்ரிக்கை பதிவு செய்தார். மடமடவென சரிந்த மும்பை அணியின் விக்கெட்டுகளால் ஸ்கோர் 111-ஐ தாண்டவில்லை. 18.1 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது மும்பை அணி. 


இந்த போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனை வீழ்த்தியுள்ள பெங்களூரு அணி, ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.