ஐ.பி.எல். 2021ம் ஆண்டுக்கான எஞ்சிய தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரின்போதும் அதிக ரன்கள் அடிக்கும் வீரர்களுக்கு ஆரஞ்சு நிற தொப்பியும், அதிக விக்கெட்டுகள் கைப்பற்றும் வீரர்களுக்கு ஊதா நிற தொப்பியும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தொடரில் நேற்று வரை நடைபெற்ற 39வது ஆட்டத்தின் முடிவு வரை இந்த தொடருக்கான அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பி டெல்லி வீரர் ஷிகர் தவான் வசம் உள்ளது. அவர் இதுவரை 10 போட்டிகளில் ஆடி 430 ரன்கள் குவித்து இந்த தொடரில் முதலிடத்தில் உள்ளார். இதில் மூன்று அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 92 ரன்கள் அடித்துள்ளார்.
அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதா நிற தொப்பி ஏற்கனவே பெங்களூர் வீரர் ஹர்ஷல் பட்டேல் வசம் இருந்தது. நேற்றைய போட்டியில் அவர் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் இந்த தொடரில் 23 விக்கெட்டுகள் கைப்பற்றி அசைக்க முடியாத அளவில் முதலிடத்தில் உள்ளார். அவர் இதுவரை 10 போட்டிகளில் ஆடி 23 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 27 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இனி வரும் போட்டிகளில் ஷிகர்தவானில் ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றுவதற்கு கடும் போட்டி நிலவுகிறது. ஷிகர் தவானுக்கு அடுத்த இடத்தில் பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் உள்ளார். அவர் 9 போட்டிகளில் ஆடி 4 அரைசதங்களுடன் 401 ரன்கள் குவித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் சென்னை சூப்பர் கிங்சின் தொடக்க வீரர் பாப் டுப்ளிசிஸ் உள்ளார். அவர் 10 போட்டிகளில் ஆடி 4 அரைசதங்களுடன் 394 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 95 ரன்கள் எடுத்துள்ளார்.
பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை ஹர்ஷல் படேலுக்கு அடுத்த இடத்தில் டெல்லி வீரர் அவேஷ்கான் உள்ளார். அவர் 10 போட்டிகளில் ஆடி 15 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார். இன்னும் அனைத்து அணியினரும் 4 போட்டிகள் வரை ஆட உள்ளதாலும், அவேஷ்கானுக்கும் ஹர்ஷல் படேலுக்கும் இடையே 8 விக்கெட்டுகள் வித்தியாசம் இருப்பதாலும் ஹர்ஷல் படேல் தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
ஆனால், ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றுவதற்கான முயற்சியில் கே.எல்.ராகுலுக்கு சொற்ப ரன்களே உள்ளனர். மும்பை அணியும், டெல்லி அணியும் ப்ளே ஆப் சுற்றை ஏறக்குறைய உறுதி செய்துவிட்டதால் ஆரஞ்சு நிற தொப்பிக்கான போட்டி ஷிகர் தவானுக்கும், ஃபாஃப் டு ப்ளிசிசுக்கும் இடையேதான் உள்ளது. ஏனென்றால், பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. அந்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு கடுமையான நெருக்கடி உள்ளது.
அடுத்தடுத்த போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றுவதற்காக கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஷிகர் தவான் உள்ள டெல்லி அணி இரண்டாவது இடத்திலும், பாப்டுப்ளிசிஸ் ஆடும் சென்னை அணி முதலிடத்திலும் உள்ளது. ஆனால், பஞ்சாப் அணி 5வது இடத்தில் உள்ளது.