ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் அடித்தது. அதைத் தொடர்ந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் சென்னை அணி நடப்புத் தொடரில் தொடர்ச்சியாக 3ஆவது போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. 


ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக முதல் 3 போட்டிகளில் சென்னை அணி தோல்வி அடைவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்ன?


தொடக்க ஆட்டக்காரர்கள் சோகம்:


சென்னை அணிக்கு கடந்த ஐபிஎல் தொடரில் டூபிளசிஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். ஆனால் இம்முறை டூபிளசிஸ் இல்லாதது சென்னை அணிக்கு தொடக்கத்தில் பெரிய சிக்கலாக அமைந்துள்ளது.குறிப்பாக கடந்த தொடரில் 635 ரன்கள் விளாசிய ருதுராஜ் கெய்க்வாட் இந்தத் தொடரில் மூன்று போட்டிகளில் வெறும் 2 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இது சென்னை அணியின் தொடக்கத்திற்கு பெரும் பலவீனமாக அமைந்துள்ளது.  மேலும் முதல் போட்டியில் டேவான் கான்வே களமிறங்கியிருந்தார். அதன்பின்னர் இரண்டு போட்டிகளில் ராபின் உத்தப்பா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வருகிறார். அவர்கள் இருவரும் சென்னை அணிக்கு சரியான தொடக்கத்தை வழங்கவில்லை. ஆகவே சென்னை அணி பவர்ப்ளே ஓவர்களில் தொடர்ந்து குறைவாக ரன்கள் அடித்து வருகிறது. 


பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்த தவறும் பந்துவீச்சாளர்கள்: 


கடந்த சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்தி வந்தது. ஆனால் இந்தத் தொடரில் சென்னை அணி பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்த தவறி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் தீபக் சாஹர் இல்லாதது தான். கடந்த ஐபிஎல் சீசனில் தீபக் சாஹர் 15 போட்டிகளில் 14 விக்கெட் வீழ்த்தினார். அதில் குறிப்பாக 10 விக்கெட்கள் பவர்ப்ளே ஓவர்களில் எடுத்து அசத்தினார். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சென்னை அணிக்கு நல்ல பந்துவீச்சை இவர் செய்திருந்தார். இவர் தற்போது காயம் காரணமாக அணியில் விளையாடவில்லை. இது அணியின் பந்துவீச்சிற்கு ஒரு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. 


சென்னை அணிக்கு வெளிநாட்டு வீரர்கள் சிக்கல்:


சென்னை அணிக்கு இந்த ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் தேர்ந்தெடுப்பதிலும் சிக்கல் நீடித்து வருகிறது. முதல் போட்டியில் கான்வே இருந்தார். அதன்பின்னர் மொயின் அலி வந்த பிறகு அவரை அணியில் எடுத்தனர். பந்துவீச்சில் ஆடம் மில்னே, சாண்டனர் மற்றும் பிரிடோரியஸ் ஆகியோரை மாற்றி மாற்றி எடுத்து வருகின்றனர். ஆகவே வெளிநாட்டு வீரர்கள் தேர்வில் இம்முறை சென்னை அணிக்கு பெரிய சிக்கல் நீடித்து வருகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண