ஐபிஎல் 2023 ப்ளேஆஃப்களுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகளை ஏகானா ஸ்டேடியத்தில் நடந்த மும்பைக்கு எதிரான 63வது போட்டியை வென்று உயர்த்தியுள்ளனர் லக்னோ அணி வீரர்கள். 5 ரன்கள் வித்தியாசத்தில் ரோஹித் ஷர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த மொசின் கான் பெரிய அளவில் உதவியுள்ளார்.
மோசின் கான்
தோள்பட்டை காயம் காரணமாக ஐபிஎல் 2023 இன் முக்கிய பகுதியை தவறவிட்ட அவர் இந்த ஐபிஎல் 2023 இன் தொடரிலேயே ஆடும் இரண்டாவது ஆட்டம் இதுதான். இந்த அற்புதமான ஆட்டத்தை 10 நாட்கள் ஐசியுவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தனது நோய்வாய்ப்பட்ட தந்தைக்கு அர்ப்பணித்தார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான அவர் கடந்த ஆண்டு பரபரப்பான சீசனைக் கொண்டிருந்தார்.
கடைசி ஓவர்
காயம் மற்றும் தந்தையின் உடல்நிலை ஆகிவற்றை தாண்டி வந்து கம்பேக் கொடுத்த அவர், இறுதி ஓவரில் அதிரடிக்கு பெயர் போன டிம் டேவிட்டிற்கு எதிராக 11 ரன்களை டிஃபன்ட் செய்து வெற்றியை வசமாக்கியுள்ளார். அவரது அற்புதமான பந்துவீச்சால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் ப்ளேஆஃப் சுற்றுக்கு செல்லும் பாதையில் ஒரு படி நெருங்கியுள்ளது.
அற்புதமான பந்துவீச்சு
அவர் முதலில் வீசிய ஓவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்த நிலையிலும் கருனால் பாண்டியா அவரை நம்பி 17 மற்றும் 20 வது ஓவர்களை கொடுத்தார். 17 வது ஓவரில் நெஹல் வதேராவை வீழ்த்தி, ஆட்டத்தை சூடு பிடிக்க செய்தார். அதே நம்பிக்கையில் கடைசி ஓவரையும் அவர் கையில் கொடுக்க, 11 ரன்கள் தேவை என்ற நிலையில் எந்த பந்தையும் பவுண்டரிக்கு செல்லவிடாமல் அற்புதமாக பந்து வீசினார்.
பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள்
இதில் சிறப்பம்சம் என்னவென்றால் களத்தில் நின்றது இரு அதிரடி மன்னர்கள் என்பதுதான். இருப்பினும் அவரது கடினமான வாழ்கை சூழலிலும் இந்த வெற்றியை சாத்தியமாக்கிய அவருக்கு பல முன்னாள் வீரர்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.