வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட ஒடுக்கத்தூர் அடுத்த ஆசனம்பட்டு பகுதியை சேர்ந்தவர் குமரேசன் வயது (47). இவரது மனைவி செந்தாமரை. இவர்களுக்கு 2 ஆண்,1 பெண் என 3 பிள்ளைகள் உள்ளனர். செந்தாமரை 100 நாள் வேலைக்கும் இதர கூலி வேலைகளுக்கும் செல்லும் நிலையில் கணவர் குமரேசன் கம்பி கட்டும் வேலை உட்பட பல்வேறு கூலி வேலைகளை செய்து வருகிறார். இந்நிலையில் குமரேசனுக்கு பல ஆண்டுகளாகவே மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. போதிய வருமானம் இல்லாத காரணத்தால் தனது கிராமத்தை சுற்றியுள்ள வனப்பகுதியின் ஓரங்களில் மலிவான விலையில் விற்கப்படும் கள்ளச்சாராயத்தை வாங்கி குடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். காலப்போக்கில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குமரேசனுக்கு ஏற்பட்ட விபத்தால் அவரால் வேலைக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. போதைக்கு அடிமையான குமரேசன் தனது மனைவியை மிரட்டி பணம் பெற்றும் சில சமயங்களில் தனது வீட்டில் உள்ள பாத்திரங்களை விற்றும் தனது கிராமத்திலேயே விற்கப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாங்கி குடித்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் நேற்று மதியம் ஆசன பட்டு பகுதியில் உள்ள வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் விற்கப்படும் கள்ளச்சாராயத்தை வாங்கி இவர் குடித்ததாகவும் இதனால் வாந்தி மற்றும் வாயில் நுரை தள்ளி சற்று தொலைவிலேயே விழுந்து உயிரிழந்துள்ளதாக குமரேசனின் மனைவி செந்தாமரை மற்றும் உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.




இதுகுறித்து மனைவி செந்தாமரை கூறுகையில்;


கள்ளச்சாராயம் குடித்து தான் எனது கணவர் உயிரிழந்தார். இனியும் நீங்கள் கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கா விடில் நான் தற்கொலை செய்துகொள்வேன். என்னோட தாலி இறங்கியது போல் மற்றவர்கள் தாலியும் இறங்காமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனது கணவர் கள்ளச்சாராயம் குடித்ததால் தான் உயிரிழந்தார். நான் அந்த காலத்திலேயே காதல் திருமணம் செய்தவள். ஆனால் இன்றைக்கு எனது தாலியை கூட விட்டுவைக்காமல் அடமானம் வைத்து குடித்து உயிரை விட்டு உள்ளார். எங்களது வீட்டில் உள்ள பத்து பாத்திரங்களை கூட அவர் விட்டு வைக்கவில்லை. கூலி வேலை செய்துதான் மூன்று பிள்ளைகளை வைத்து வாழ்வாதாரத்தை நடத்தி வந்தேன். இன்றைக்கு எனது கணவர் உயிரிழந்தது எனக்கு பேரிழப்பாக உள்ளது. நான் என்ன செய்யப் போகிறேன் எனத் தெரியவில்லை. தயவுகூர்ந்து அரசு தீவிர நடவடிக்கை எடுத்து கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒலிக்க வேண்டும் எனக் கூறினார். 


 




 


உயிரிழந்த குமரேசனின் சகோதரி அனிதா கூறுகையில்,


எப்போதுமே என் அண்ணன் குடிப்பார். ஆனால் நேற்றைக்கு போன் செய்து நான் இரண்டு பொட்டலம் சாராயம் குடித்து விட்டேன். எனக்கு வயிறு எரிகிறது உடனே வா என அழைத்தார். ஆனால் அதற்குள் இறந்து விட்டார். இப்போது கூட காவல் துறையினர் அவரது சட்டை பையில் இருந்து ஒரு பொட்டலத்தையும், வீட்டில் இருந்து இரண்டு பொட்டலத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர். எங்கள் கிராமத்தில் பல ஆண்டுகளாக நீடிக்கும் கள்ளச்சாராய விற்பனையால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். கள்ளச்சாராயத்திற்கு பணம் இல்லை என நேற்று எனது அண்ணியின் தாலியை கூட அடமானம் வைத்து குடித்துள்ளார். ஒரு படி மேலாக பத்தாம் வகுப்பு முடித்த அவரது மகனின் புத்தகத்தை கூட எடைக்கு போட்டு குடித்துள்ளார். மலிவான விலையில் சாராயம் கிடைப்பதால் ஒரு தட்டை கூட விட்டு வைப்பதில்லை அதனையும் விற்று குடித்துவிட்டார். குறைந்த பணத்திற்கு கள்ள சாராயம் கிடைப்பதால் அதிகமானோர் அதனை நாடி செல்கின்றனர். 100 நாள் வேலைக்கு வரும் ஒரு சிலர் கூட சாராயத்தை குடித்து விட்டு தான் வந்து வேலை செய்கிறார்கள் கேட்டால் தெம்பாக இருக்கும் என கூறுகிறார்கள். இந்த கிராமத்தில் பாதி பேர் தாலியே இல்லாமல் தான் உள்ளோம். இந்த அவலத்தை போக்க வேண்டுமெனில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து கள்ளசாராயத்தை முற்றிலுமாக ஒலிக்க வேண்டும் என கூறினார்.




 


மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணா விளக்கம்


வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, உயிரிழந்த குமரேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கியுள்ளார். அதைத்தொடர்ந்து அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ச்சியான உடல் நலக்குறைவு காரணமாக நேற்று அவர் உயிரிழந்துள்ளார். இருந்த போதும் இது தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அதன் பிரேதபரிசோதனை முடிவு வந்த பிறகு உயிரிழந்ததற்கான காரணம் குறித்து தெரிய வரும் என கூறினார். மேலும் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு கைது மற்றும் பறிமுதல்கள் மேற்கொண்டு வருகிறேன் என்றும் கூறினார்.  காவல்துறை குமரேசனின் இறப்பு உடல்நல குறைவால் நிகழ்ந்தது என கூறினாலும், ஆசனம்பட்டு பகுதியில் கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து நடைபெறுவது அப்பகுதி மக்கள் கூறுகையில் தெரிய வருகிறது. ஆகவே இதனை முற்றிலுமாக ஒழிக்க மாவட்ட நிர்வாகமும் அரசும் தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.