நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய பும்ரா மற்றும் பண்டிற்கான மாற்று வீரர்களை, முறையே மும்பை மற்றும் டெல்லி அணிகள் அறிவித்துள்ளன.


16வது ஐபிஎல் சீசன்:


நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான, நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளன. 52 நாட்கள் நடைபெற உள்ள இந்த 12 மைதானங்களில் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதனிடையே, பல அணிகளை சேர்ந்த முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகி வருகின்றனர். இந்த பட்டியலில் மும்பை அணியில் இருந்து பும்ரா, கொல்கத்தா அணியில் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் டெல்லி அணியில் இருந்து பண்ட் ஆகியோர் என பல வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவ்வாறு தொடரில் இருந்து விலகிய வீரர்களுக்கு, அணி நிர்வாகங்கள் மாற்று வீரர்களை அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மாற்று வீரர்களை அறிவித்துள்ளன.


பும்ராவிற்கான மாற்று வீரர் சந்தீப் வாரியர்: 


முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டில் இருந்தே இந்திய மற்றும் மும்பை அணியின் நட்சத்திர வீரரான பும்ரா, தொடர்ந்து மருத்துவ கணகாணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முழுமையாக தன்னை தயார்படுத்திக்கொள்ளும், வகையில், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்தும் முழுமையாக விலகியுள்ளார். இதையடுத்து, மும்பை அணி பும்ராவிற்கு பதிலாக, கேரளாவில் பிறந்த சந்தீப் வாரியரை மாற்று வீரராக அறிவித்துள்ளது. உள்ளூர் போட்டிகளில் தற்போது தமிழ்நாடு அணிக்காக இவர் விளையாடி வருகிறார். 31 வயதான இவர் ஆர்சிபி அணியால் 2013ம் ஆண்டு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதைதொடர்ந்து 2019ம் ஆண்டு கொல்கத்தா அணியில் இணைந்தார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் கடந்த 2021ம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கை அணிக்கு எதிரான டி-20 போட்டி மூலம், சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். சந்தீப் வாரியர் இதுவரை 5 ஐபிஎல் போட்டிகளிலும், ஒரு சர்வதேச டி-20 போட்டியில் விளையாடியுள்ளார். இவரை ரூ.50 லட்சத்திற்கு மும்பை அணி ஒப்பந்தம் செய்துள்ளது.


பண்டிற்கான மாற்று வீரர் அபிஷேக் போரல்:


இதேபோன்று கடந்த ஆண்டு இறுதியில் கார் விபத்தில் சிக்கிய, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இதனால், நடப்பாண்டு தொடரிலிருந்து அவர் முழுமையாக விலகியுள்ளார். இதையடுத்து அவருக்கான மாற்று வீரராக, மேற்குவங்கத்தை சேர்ந்த 20 வயது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன அபிஷேக் போரல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 16 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 3 லிஸ்ட் ஏ போட்டிகளிலும், மேற்குவங்க அணிக்காக 3 டி-20 போட்டிகளிலும் அபிஷேக் விளையாடியுள்ளார். இவரை டெல்லி அணி ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.