கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பேரூராட்சியில் அதிமுக கூட்டணியை சேர்ந்த இருவரும் திமுக கூட்டணியை சேர்ந்த 13 பேர் என மொத்தம் 15 உறுப்பினர்கள் உள்ளனர். பேரூராட்சியின் தலைவராக திமுகவைச் சேர்ந்த ஜெயந்தி மணிகண்டன் செயல்பட்டு வருகிறார்.
அரவக்குறிச்சி பேரூராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளுக்காக டெண்டர் விடும் போது ஒவ்வொரு பணிக்கும் தனியாக கமிஷன் பெறப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் கமிஷன் தொகையில் பேரூராட்சியில் செயல்படும் தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் பங்கிட்டு தரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அண்மைக்காலமாக பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான கமிஷன் தொகையை யாருக்கும் பங்குதாராமல் தலைமை இடத்துக்கு அனுப்பி விடுவதாகவும், இதனால் தேர்தலில் செலவு செய்து வெற்றி பெற்று உறுப்பினராக செயல்பட்டு வரும் உறுப்பினர்களுக்கு பெறப்படும் கமிஷன் தொகையில் பங்கு கொடுப்பதில்லை கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று பேரூராட்சி மாமன்ற கூட்டம் நடைபெறுவதாக அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.
ஆயினும், நேற்று நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்திற்கு அதிமுகவை சேர்ந்த இளமதி மற்றும் அன்பு செல்வி ஆகிய இருவரும், திமுகவைச் சேர்ந்த மைக்கேல் ராஜ் மற்றும் ஈஸ்வரி மற்றும் தலைவர் ஜெயந்தி மணிகண்டன் கூட்டத்திற்கு வந்திருந்தனர். அதே சமயம் மாமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள ஆளும் திமுக உறுப்பினர்களே கமிஷன் தொகை தரவில்லை எனக் கூறி புறக்கணிப்பு செய்துள்ளனர். இதனால், நடைபெற இருந்த கூட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாகவும் பேரூராட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரவக்குறிச்சி அதிமுக நகர செயலாளரும், பேரூராட்சியின் 11-வது வார்டு உறுப்பினராக செயல்பட்டு வரும் அதிமுகவை சேர்ந்த இளமதி செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது, வளர்ச்சி திட்ட பணிகளுக்காக டெண்டர் விடும் போது வாங்கும் கமிஷனில் யாருக்கும் பங்கு கொடுக்காமல் இருப்பதால் உறுப்பினர்கள் அதிருப்தியில் இருந்து வந்தனர். இன்று தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக ஆளும் திமுக கவுன்சிலர்கள் நடைபெற இருந்த மாமன்ற கூட்டத்தை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து இதே நிலை நீடித்தால் அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி பணிகள் பாதிப்படையும். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். விரைவில் இந்த சிக்கலை சீர்படுத்த வேண்டும். தவறினால் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் .ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் அவரது அனுமதி பெற்று பேரூராட்சிக்கு முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.