அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கான மினி ஏலம், கொச்சியில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர சொகுசு ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 405 வீரர்கள் தங்களது பெயரை முன்பதிவு செய்துள்ளனர். அவர்களில் 273 பேர் இந்தியர்கள், 132 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர். அனைத்து அணிகளிலும் சேர்த்து 87 வீரர்களுக்கான காலியிடங்கள் உள்ளன. மொத்தமாக அனைத்து அணிகளும் சேர்த்து ரூபாய் 183.15 கோடியை கையிருப்பாக கொண்டு இந்த ஏலத்தை தொடங்கின.
தீவிரம் காட்டிய ஐதராபாத்:
அதன்படி, முதல் வீரராக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் அடிப்படை ஏலத்தொகையான ரூ.2 கோடிக்கு குஜராத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். கடந்தாண்டு வரை ஐதராபாத் அணிக்கு விளையாடி வந்த இவர், ரூ.14 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் இருந்தார். அதைதொடர்ந்து, அண்மையில் ஐதராபாத் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வில்லியம்சன், அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு குஜராத் அணியால் எடுக்கப்பட்டார். அதைதொடர்ந்து, இங்கிலாந்தை சேர்ந்த ஹாரி ப்ரூக்கை ஏலத்தில் எடுப்பதற்கு பல அணிகளும் தீவிரம் காட்டின. இறுதியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அவரை, ரூ.13.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆல்-ரவுண்டரான இவர் அண்மையில் நடந்த பாகிஸ்தான் உடனான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுதியது குறிப்பிடத்தக்கது.
இந்திய வீரரான மயங்க் அகர்வாலை ஏலத்தில் எடுக்க சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் கடுமையாக போட்டியிட்டன. ஆனால் இறுதியில் அவரை ரூ.8.25 கோடிக்கு ஐதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது. அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் அந்த அணிக்கு, மயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைமதிப்புமிக்க ஏலம்:
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சாம் கரனின் பெயர் ஏலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அவரை ஏலத்தில் எடுக்க மும்பை, சென்னை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் மல்லுக்கட்டின. ஒரு கட்டத்தில் மும்பை விலக, சென்னை மற்றும் பஞ்சாப் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், ரூ.18.5 கோடிக்கு சாம் கரனை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை சாம் கரன் பெற்றுள்ளார். முன்னதாக, 2021ல் கிறிஸ் மோரிஷ் ராஜஸ்தான் அணியால், ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதே அதிக ஏலத்தொகையாக இருந்தது.
மும்பை அணியில் கேமரூன் கிரீன்:
இதனிடையே, ஜேசன் ஜோல்டரை ரூ.5.75 கோடிக்கு ராஜஸ்தான் அணியும், ரூ.50 லட்சம் என்ற அடிப்படை தொகைக்கு ரகானேவை சென்னை அணியும் ஏலத்தில் எடுத்தது. அடிப்படை தொகையாக ரூ.2 கோடி பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆஸ்திரேலிய வீரர், கேமரூன் கிரீனை ஏலத்தில் எடுக்க டெல்லி மற்றும் மும்பை இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இரண்டாவது வீரர் எனும் பெருமையுடன், ரூ.17.5 கோடி தொகைக்கு மும்பை அணியால் கேமரூன் கிரீன் ஒப்பந்தம் செய்யமாட்டார்.
சென்னை அணியில் ஸ்டோக்ஸ்:
பென் ஸ்டோக்ஸ் பெயர் அறிவிக்கப்பட்டதும் அவரை ஏலத்தில் எடுக்க பெங்களூர், ராஜஸ்தான், லக்னோ மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் வரிந்து கட்டின. மாறி மாறி ஏலத்தொகையை அணி நிறுவனங்கள் உயர்த்தின. இறுதியில் சென்னை அணி, ரூ.16.25 கோடி எனும் தொகைக்கு ஸ்டோக்ஸை ஏலத்தில் வென்றது. இதனிடையே, மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த நிக்கோலஸ் பூரானை லக்னோ அணி ரூ.16 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.