பல தலைமுறைகள் கண்டிராத குளிர்கால புயலை அமெரிக்கா எதிர்கொண்டுள்ளது. மைனஸ் 40 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு குளிர் வீசி வருவதால் அமெரிக்கா நிலைகுலைந்து உள்ளது.


கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வரும் நிலையில், மக்களின் பயண திட்டம் தடைகளை சந்தித்துள்ளது. 


வரலாறு காணாத குளிர்கால புயல் காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெரும் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. கடும் பனி, தீவிரமான காற்று ஆகியவை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை கடுமையாக பாதித்துள்ளது. 


அமெரிக்காவின் மத்திய பகுதியையும் ஆர்டிக் பகுதியையும் கடும் குளிர் திருப்பி போட்டுள்ளது. கடும் குளிரில் சிக்கி தவித்து வரும் லட்சக்கணக்கான மக்கள், கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வெளியே செல்லும் எவரும் சில நிமிடங்களிலேயே உறைபனிக்கு ஆளாகும் அளவுக்கு குளிர் நிலவி வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் பைடன், "நீங்கள் குழந்தையாக இருந்தபோது ஏற்பட்ட குளிர் காலம் போல இது இல்லை. இது மோசமான விஷயம்" என்றார்.


கிறிஸ்துமஸ் காரணமாக 10 கோடி மக்கள் சாலையில் பயணிப்பார்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், வெளியே எதுவும் தெரியாத அளவுக்கு மூடுபனி நிலவிவருகிறது. அதேபோல, சாலைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 


அமெரிக்காவின் வடக்கு பகுதியான தெற்கு டகோட்டாவில் அமைந்துள்ள I-90 நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வரை, அது திறக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


"சாலைகளை சரி செய்வதற்கும் மீட்டெடுப்பதற்கும் மாநிலம் முழுவதிலும் பணியாளர்கள் பயன்படுத்துகின்றனர்" என தெற்கு டகோட்டா போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.


போக்குவரத்து நெரிசல் குறித்து பென்னிங்டன் கவுண்டி ஷெரிப் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "மாநிலத்தில் ரேபிட் சிட்டி அருகே சுமார் 100 வாகன ஓட்டிகள் சிக்கித் தவித்தனர். பயணத்தை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


 






சிகாகோ ஓ'ஹேர், டென்வர் சர்வதேச விமான நிலையங்களில் வியாழன் அன்று 22,000க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன. 5,500 விமானங்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன.