நல்ல வீரர்கள், நல்ல தலைமை என அனைத்தும் இருந்தும் இதுவரை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றாத அணி ஆர் சி பி. ஈ சாலே கப் நமதே என தொடர்ந்து போராடிய அந்த அணி இதுவரை கோப்பையை தொடக்கூட இல்லை. இதற்கிடையே தான் தன்னுடைய கேப்டன் பொறுப்பில் இருந்தும் இறங்கினார் விராட் கோலி. முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து உலகக் கோப்பையுடன் விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். 


அந்த அறிவிப்பை தொடர்ந்து ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் இந்தத் தொடர் உடன் விலகும் அறிவிப்பை அறிவித்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி 2013ஆம் ஆண்டு முதல் முறையாக பொறுப்பு ஏற்றார். 8 சீசனாக கேப்டனாக உள்ள கோலி தற்போது வரை 132 போட்டிகளில் 60 வெற்றி மற்றும் 64 தோல்வியை சந்தித்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரின் தொடக்கம் முதல் ஒரே அணிக்காக விளையாடும் வீரர் விராட் கோலி தான். அவர் அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடியுள்ளார். கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகி சோகத்தை ஏற்படுத்திய அதேநேரம் டி வில்லியர்ஸும் இனி கிரிக்கெட் இல்லை என அறிவித்தார்.




2011-ம் ஆண்டு ஆர்சிபி அணிக்குள் வந்த டிவில்லியர்ஸ் கிட்டத்தட்ட 10 சீசன்களாக அந்த அணிக்காக விளையாடியுள்ளார்.  ஆர்சிபி அணி 5 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லவும் மிஸ்டர் 360 காரணமாக அமைந்துள்ளார். இப்படி தொடர் சோகங்களால் மூழ்கிய ஆர்சிபி வீரர்களை குஷிப்படுத்தும் விதமாக உத்வேக பாடல் ஒன்றை ஆர்சிபி வெளியிட்டுள்ளது. ஆர்சிபி வீரர் சாஹலின் மனைவி உருவாக்கியுள்ள இப்பாடலில் விராட் கோலி, சாஹல்,டி வில்லியர்ஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.  Never Give Up. Don’t Back Down என்ற உத்வேக வரிகளை உள்ளடக்கிய துள்ளலான பாடலாக இது உருவாக்கப்பட்டுள்ளது