"நீங்கள் எங்களை பிரிந்துசென்ற பின்பு உங்களின் வெற்றிடத்தை உணராத நாட்களே கிடையாது . ஒரு ஆசான் என்பவர் கடவுளுக்கு மேல் மேன்மையானவர் சந்தேகத்து இடம் இன்றி சொல்கிறேன் நீங்கள் தான் என்னுடைய சிறந்த ஆசான் . உங்களின் ஆசிர்வாதம் எப்போதும் என் மீது பொழியும் என்று நான் நம்புகிறேன் . மிஸ் யூ அப்பா”  - என்று தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் முதல்வர் மு கருணாநிதிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்  தமிழ் திரைப்பட நடிகையும், நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளருமான குஷ்பு உருக்கமாக ட்வீட் செய்திருந்தார் .


மேலும் அவரது பதிவில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கடைசியாக பயன்படுத்திய சக்கர நாற்காலியின் புகைப்படமும் , குஷ்பு கடைசியாக கருணாநிதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் இணைத்து இருக்கிறார் .






1989-ஆம் ஆண்டு 'வருஷம் 16 ' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட கதாநாயகியாக அறிமுகம் ஆகிய குஷ்பு 150-க்கும் மேற்பட்ட தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார். திரைப்படங்களை தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி  வந்த குஷ்பு , சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பணியாற்றியதில் இருந்து விடுபட்டு அரசியலில் இணைந்தார்.


"என்னுடைய அரசியல் பயணத்தை நான்  திராவிட முன்னேற்ற கழக கட்சியில் இருந்துதான் தொடங்கினேன். அதற்கு காரணம் கருணாநிதிதான்" என்று பல கூட்டங்களிலும் , பத்திரிகையாளர் சந்திப்பிலும் பதிவு செய்திருக்கும் குஷ்பு தனது அரசியில் பயணத்தை 2010-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து தொடங்கினார். சில கருத்து வேறுபாடு காரணமாக 2014-ஆம் ஆண்டு திமுக கட்சியில் இருந்து விலகி அதே ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2020-ஆம் ஆண்டு வரை அந்த கட்சியின் செய்தி தொடர்பாளராக பதவி வகித்துவந்தார் குஷ்பு .


சென்ற வருடம் தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்து கொண்டுள்ள இவர், நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் எழிலனிடம் 32,200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலுக்கு அப்பாற்பட்டு மறைந்த திமுக தலைவரின் பிறந்தநாள் அன்று மிஸ் யூ அப்பா என்றும்,  கலைஞர்தான் என்னுடைய சிறந்த ஆசான் என்ற வகையிலும் பதியப்பட்டிருக்கும் அவருடைய இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.