2021-ம் ஆண்டு ஏப்ரம் மாதம் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, சிகிச்சை எடுத்து கொண்ட தமிழ்நாடு வீரர் நடராஜன் ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்க இருந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட் இருந்த நிலையில், நடராஜானுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர், இந்த ஐபிஎல் தொடரில் மீண்டும் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 


நடராஜனை துரத்தும் சோகம்:


கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால், நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம்பெற்றிருந்தார். நெட் பவுலராக வாய்ப்பு கிடைத்த அவருக்கு, சில வீரர்கள் காயம் காரணமாக வெளியேறிதால் டி-20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார் நடராஜன். மேலும், ஒரே சுற்றுப்பயணத்தில் கிரிக்கெட்டின் மூன்று ஃபார்மேட்களிலும் அறிமுகமான ஒரே வீரர் என்ற சாதனையையும் நடராஜன் படைத்திருந்தார். 


ஆனால், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, நடராஜனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஆரம்பித்த 2021 ஐபிஎல் தொடரில் பங்கேற்று இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர், முழங்காலில் ஏற்பட்டது காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். பின்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட நடராஜன் தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் ஓய்வெடுத்து வந்தார். 






அப்போது ஏபிபி நாடு செய்தி தளத்திற்கு பேட்டி அளித்திருந்த அவர், ஒரு காயத்தில் இருந்து விளையாட்டு வீரர்கள் திரும்பி கம்-பேக் கொடுப்பது என்பது மிகவும் சவாலான விஷயம், அது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேட்டபோது "காயத்திற்கு பின்பு திரும்புவதில் எந்த கஷ்டமும் உணரவில்லை, ஏற்கனவே நான் முழங்கை அறுவை சிகிச்சை மேற்கொண்டு உள்ளேன், அதையெல்லாம் பாக்கும்போது இது ஒன்னுமே இல்லை, அதனால சீக்கிரமே கம்பேக் குடுத்துருவேன்" என தெரிவித்திருந்தார்.


கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த அவர், ஐபிஎல் தொடரில் கம்-பேக் தர இருப்பதாக நம்பிக்கையோடு தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறாததும் ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், காயம் காரணமாக பிசிசிஐ ரிஸ்க் எடுக்காமல் நடராஜனை தேர்வு செய்வதை தவிர்த்திருந்தது. 









இப்போது காயத்தில் இருந்து மீண்டு முழு உடல் தகுதியோடு ஐபிஎல் தொடரில் விளையாட வந்த அவரை, கொரோனா விட்டுவைக்கவில்லை. நோய்க்கான அறிகுறிகள் இல்லையென்றாலும், தொற்று உறுதி செய்யப்பட்டதால், ஹைதராபாத் அணியில் இருந்து விலகி இருக்க உள்ளார் நடராஜன்.


கடந்த ஐபிஎல் தொடரில் நடராஜன் யார்க்கர் பந்துகளை வீசி தோனி, கோலி, டி வில்லியர்ஸ் உள்ளிட்ட பெரிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். இந்த தொடரின் மூலமே நடராஜனின் பந்துவீச்சு  திறமை வெளி உலகுக்கு தெரியவந்தது. அவரின் திறமையை அறிந்த, ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து அவரை மெருகேற்ற செய்தார். சிறப்பாக தொடங்கிய அவரது பயணத்தில் முட்டுக்கட்டைகள் விழுந்துள்ளது அவரது கிரிக்கெட் கரியரை பாதித்துள்ளது. எனினும், விரைவில் அவர் மீண்ட வர வேண்டும். நிறைய கிரிக்கெட் ஆட வேண்டும்.