ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மைதானத்தில் இன்று ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியும், புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ள ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோத உள்ளன.


இந்நிலையில், ஹைதராபாத் அணியைச் சேர்ந்த தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியாகி இருந்தாலும், நடராஜனுக்கு தொற்றுக்கான அறிகுறி இல்லை என மருத்துவ குழு தெரிவித்துள்ளது. இதனால், நடராஜனுடன் தொடர்பில் இருந்த ஹைதராபாத் அணியைச் சேர்ந்த ஆறு பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்றொரு தமிழக வீரரான விஜய் சங்கர், நெட் பவுலர் பெரியசாமி, அணி மேலாளர் விஜய் குமார், பிஸியோதெரபிஸ்ட் ஷியாம் சுந்தர், மருத்துவர் அஞ்சனா, லாஜிஸ்டிக்ஸ் மேலாளர் துஷார் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 






ஐபிஎல் நிர்வாகம் சொல்வது என்ன?


ஹைதராபாத் அணியைச் சேர்ந்த நடராஜன் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 6 பேரைத் தவிர, மற்ற வீரர்களுக்கு இன்று காலை எடுக்கப்பட்ட ஆர்டி.பிசிஆர் பரிசோதனை முடிவில், தொற்று இல்லை என்பது உறுதியானதால் திட்டமிட்டபடி டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான போட்டி நடைபெறுக் என ஐபிஎல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முக்கிய வீரர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், தீவிர பரிசோதனைக்கு பிறகே போட்டி நடைபெறும் என தெரிகிறது. 






முன்னதாக, ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தொடர் நடைபெற்று கொண்டிருந்தபோது ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம் செய்யப்பட்டது. ரசிகர்கள் இன்றி பாதுகாப்பான பயோ பபிள் சூழலில் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், பூட்டிய மைதானத்திற்கு உள்ளேயும் கொரோன நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டதே 2021 ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட காரணமாக அமைந்தது.


இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தொடரின் இரண்டாம் பாதி இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. இம்முறை, ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டு, ஏற்கனவே 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இரண்டாம் பாதி தொடங்கிய நான்காவது நாளே அணி வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தொடரை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 


இந்த தொடரில், இன்னும் 28 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், பாதுகாப்பான முறையில் போட்டிகளை நடத்தி முடிக்கும் முனைப்பில் உள்ளது பிசிசிஐ. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாகவும், சிகிச்சைக்கு தேவையான அவசர உதவிகளை மேற்கொள்ளவும் அனைத்து முன்னேச்சரிக்கை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிசிசிஐ உறுதி அளித்திருந்தது. நிபுணத்துவம் நிறைந்த மருத்துவ குழுக்கள் ஆகியவற்றை வீரர்கள் தங்கியிருக்கும் பதிகளில் பயோ-பபிள் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தங்க வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தது. பல அடுக்கு பாதுகாப்பையும் மீறி கொரோனா புகுந்துள்ளதால், பாதுகாப்பான முறையில் தொடர் நடைபெறுமா என்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.