2021 ஐபிஎல் தொடரில், தற்போது புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் சென்னை இரண்டாவது இடத்திலும், 10 புள்ளிகளுடன் பெங்களூரு மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்நிலையில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ஷார்ஜாவில் தொடங்கியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.
இன்றைய போட்டியில், பெங்களூரு அணிக்காக சிங்கப்பூர் கிரிக்கெட் வீரர் டிம் டேவிட் களமிறங்குகிறார். ஐபிஎல் தொடரில் விளையாடும் முதல் சிங்கப்பூர் வீரரான இவர், ஒரு ஆல்-ரவுண்டர். டி-20 கிரிக்கெட்டில் அதிரடி பேட்ஸ்மேன் என பெயர் பெற்ற டிம் டேவிட், கிரிக்கெட் உலகில் நடைபெறும் பெரும்பாலான அனைத்து முக்கிய டி-20 தொடர்களிலும் விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் இப்ப எண்ட்ரி கொடுத்திருக்கும் அவர், ஆர்சிபியின் ட்ரம்ப் கார்டாக இருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் டூ ஐபிஎல்:
இரண்டு முறை கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக கோலி டிம் டேவிட்டை களமிறக்கி உள்ளார். இந்த சீசன் தொடங்கி இரண்டாம் பாதி போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நிலையில், டிம் டேவிட் களமிறங்கி உள்ளது அவர்மீது இன்னும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
25 வயதேயான டிம், ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்டவர்.சிங்கப்பூர் அணிக்காக விளையாடி வரும் அவர், இதுவரை 14 சர்வதேச டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 558 ரன்களை எடுத்திருக்கும் அவர், 158+ ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.
பிக் பாஷ் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் என முக்கிய டி-20 லீக் தொடர்களில் விளையாடியுள்ள அவரை கண்டுக்கொண்ட ஆர்சிபி அணி, ஐபிஎல்லில் விளையாட ஒப்பந்தம் செய்தது. உலகின் பிரபலமான கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ஐபிஎல்லில் விளையாட இருக்கும் அவர், தடம் பதிக்க காத்திருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ‘தி ஹண்ட்ரட்’ கிரிக்கெட் தொடரின் சாம்பியன் அணியில் டிம் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளுக்குமே இந்த சீசனின் முதல் பாதி சிறப்பாக அமைந்திருந்ததால், இரண்டாம் பாதியிலும் சிறப்பாக விளையாடி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொள்ள இரு அணிகளும் திட்டமிடும். சர்வதேச டி-20 கிரிக்கெட் விளையாடும் 106 நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று! இன்னும் சர்வதேச தொடர்களில் களம் காணாத சிங்கப்பூர் அணியின் அடையாளமாய் டிம் டேவிட் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துகள் டிம்!