Delhi Court Firing: நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு - பிரபல தாதா உள்பட 4 பேர் பலி!
ஜிதேந்தர் மான் கோகி மீது தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தாக்குதல் நடத்திய இருவரையும் டெல்லி போலீசார் சுட்டுக் கொன்றனர்.

டெல்லி ரோகிணி பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பிரபல தாதா உள்பட நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பிரபல தாதா ஜிதேந்தர் கோகி விசாரணைக்காக டெல்லி ரோகிணி நீதிமன்றத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டபோது, கோகி மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 3 பேர் கொண்ட கும்பல் கோகியை துப்பாக்கியால் சுட்டனர். இதில் இருவர் வழக்கறிஞர் உடையில் இருந்தனர். இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், போலீசார் தாக்குதல் நடத்தியதில் 3 பேரும் உயிரிழந்தனர். அந்த கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கோகியும் கொல்லப்பட்டார்.
Just In



இந்த சம்பவம் குறித்து டெல்லி பார் கவுன்சிலின் தலைவர் ராகேஷ் ஷெராவத், "ரோகிணி நீதிமன்றத்தில் நடைபெற்ற சம்பவம் பெரும் பாதுகாப்பு குறைபாட்டால் நடந்துள்ளது. இதனை நாங்கள் கண்டிக்கிறோம். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடப்பது, நீதிமன்ற பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. பாதுகாப்பு ஊழியர்களின் கவனக்குறைவால் தான் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்கின்றன. இந்த பிரச்சினையை நாங்கள் அவசர கூட்டத்தில் எடுத்து பேசுவோம், இன்று அல்லது நாளை டெல்லி போலீஸ் கமிஷனரை சந்திக்க முயற்சிப்போம். பொறுப்பான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.