பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 2021 ஐபிஎல் சீசனின் இரண்டாம் பாதி போட்டிகள் நாளை தொடங்க உள்ளது. கொரோனா பரவல் காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கும் போட்டியில் பங்கேற்பதற்கு முன்னர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று கடைசியாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டது.
பயிற்சி களத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றது. கேப்டன் தோனி புது ஸ்டைலில் இந்த ஐபிஎல் சீசனில் களமிறங்கியுள்ளது, ரெய்னா ரிட்டர்ன்ஸ் என சென்னை ரசிகர்கள் போட்டிகளுக்காக காத்திருக்கின்றனர்.
ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியும், மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியும் மோதும் முதல் போட்டி என்பதால் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் நடந்த மும்பைக்கு எதிரான போட்டியில், 218 ரன்கள் அடித்தும் தோல்வியைத் தழுவியதற்கு பதலடி கொடுக்க சென்னை அணி காத்திருக்கிறது. மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் அரை சதம் கடந்த டூபிளெசிஸ்க்கு காயம் ஏற்பட்டுள்ளது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகவே அமைந்துள்ளது. இதனால், தோனி தலைமையிலான சிஎஸ்கே, கெய்க்வாடோடு யாரை ஓப்பனிங் களமிறக்கப்போகிறார்கள், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது நாளை தெரியவரும்.
இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த சீசனின் முதல் பாதி முடிவில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தலா 7 போட்டிகளில் விளையாடியது. இரு அணிகளும் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் சென்னை முன்னிலைப் பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. பெங்களூர் மூன்றாம் இடத்தில் உள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி விளையாடியுள்ள 7 போட்டிகளில், 4 போட்டிகளில் வெற்றி பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தொடங்கும் இரண்டாம் பாதியில் சிறப்பாக விளையாடும் அணிகள் புள்ளிப்பட்டியலில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், டாப் நான்கில் இடம் பிடிக்கப்போகும் அணிகள் யாவை என்பதில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.