பஞ்சாப் மாநில முதல்வராக எட்டு ஆண்டுகள் பதவி வகித்த கேப்டன் அம்ரிந்தர் சிங் தனது முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். கட்சியின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக பஞ்சாப் காங்கிரஸில் அவருக்கும் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டுவந்த நிலையில் கட்சி மேலிட அறிவுரையின்படி அவர் இன்று ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டுத் திரும்பிய அம்ரிந்தர் சிங் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ‘காங்கிரஸ் கட்சியில் நான் தொடர்ந்து மூன்றாவது முறையாக அவமானப்படுத்தப்பட்டுள்ளேன். நான் தொடர்ந்து காங்கிரஸ் நபர்தான். அடுத்தகட்டமாக என்ன செய்வதென்று எனது ஆதரவாளர்களிடம் பேசி முடிவு செய்வேன்’ எனக் கூறியுள்ளார்.
ஆனால் பதவியை செய்துள்ள அம்ரிந்தர் சிங் அடுத்து என்ன செய்வார் என்கிற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. சிலர் அவர் பாரதிய ஜனதாவில் சேர வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தாலும் சிலர் அவர் புதிய கட்சித் தொடங்க உள்ளார் எனக் குறிப்பிட்டு வருகின்றனர். அதற்கான அறிவிப்பும் எந்த நேரமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இன்றுகாலை அம்ரிந்தர் சிங்கும் கட்சியித் தலைமையிடமும் தொலைபேசியில் உரையாடியதாகத் தெரிகிறது. அதில் ராகுல் காந்திதான் அம்ரிந்தர் சிங்கை ராஜினாமா செய்யச் சொன்னதாகவும் அதற்கு பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அம்ரிந்தர் சிங்குக்கும் பஞ்சாப் காங்கிரசுக்கும் இடையே முட்டல் மோதல் வெடிப்பது இது முதன்முறையல்ல. 2015ல் இதே போன்றதொரு சூழலில் அந்த மாநில காங்கிரஸார் அவரைக் கட்சியிலிருந்து வெளியேறச் சொல்லி வற்புறுத்தினர் இருந்தும் 2017ல் மீண்டும் அவர் அந்த மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அந்த மாநிலத்தின் பழமையான கட்சியான அகாலிதலில் இருந்து பிரிந்த அம்ரிந்தர் சிங், ஷிரோன்மனி அகலிதல் என்கிற கட்சியைத் தொடங்கினார் அது 1998ல் காங்கிரஸுடன் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது பதவி விலகியுள்ள அம்ரிந்தர் சிங் இதன்மூலம் காங்கிரஸ் உடனான தனது 20 வருடத்துக்கும் மேலான உறவை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார். இதையடுத்து ஒருவேளை மீண்டும் ஷிரோன்மனி அகலிதளம் உருவாகலாம் அல்லது வேறு புதிய பெயரில் கட்சி உருவாகலாம் என்று அவரது ஆதரவாளர்கள் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.