இதோ... அதோ என்றில்லாமல் வந்துவிட்டார் விஜய். ஆம்.... நடிகர் விஜய் மக்கள் இயக்கம், நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்டங்களிலும் களம் காண உள்ளது. இது ஏதோ செவி வழி செய்தியில்லை. உறுதியாக, அறுதியாக கிடைத்த தகவல். அதுமட்டுமல்ல... போட்டியிடும் தனது இயக்க ரசிகர்களுக்கு... இல்லை.. இல்லை... தொண்டர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வழியனுப்பி வைத்திருக்கிறார் விஜய்.
காத்திருந்த விஜய்!
நடிகர் விஜய்-அரசியல் இவை இரண்டு எப்போதும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள். அது எந்த ஆட்சியாக இருந்தாலும் அங்கு விஜய்யை மையமாக வைத்து ஏதாவது ஒரு அரசியல் நகர்ந்து நடந்திருக்கும். முந்தைய திமுக ஆட்சியில் விஜய் சந்தித்த கசப்பான அனுபவங்கள். அதன் பின் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தது. அதன் பின் அதிமுக தலைமையுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவம். அதன் பின் பாஜக உடன் மறைமுக உரசல். இவையெல்லாம் கடந்து, ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் ரெய்டு என அரசியலில் இல்லாமலேயே அரசியல் பேசப்பட்டார் விஜய். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஓட்டுப்பதிவு அன்று சைக்கிளில் வந்து ஓட்டளித்தது, ஒரு விதமான சமிக்ஞை என பேசப்பட்டது. இப்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. சரி... இனி விஜய் எதுமாதிரியான அரசியல் தொடர்பான சர்ச்சைக்குள் வருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், எதிர்பாராத ஒன்றை அவர் தற்போது அரங்கேற்றியிருக்கிறார்.
அரசியல் கட்சிக்கு இணையான கட்டமைப்பு!
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதற்கான வேட்புமனுத்தாக்கலும் தொடங்கியிருக்கிறது. இரண்டு கட்டமாக நடக்கவிருக்கும் அந்த தேர்தலை ஒரு கட்டமாக நடத்தவும், இரு கட்ட தேர்தலுக்கு தடை கேட்டு அதிமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு என்ன விடை கிடைக்கும் என்று தெரியாத நிலையில், பாமக தனித்து போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. இப்படி தான் இருக்கப் போகிறது உள்ளாட்சி தேர்தல் என்கிற எதிர்ப்பை உடைத்திருக்கிறார் விஜய். ஆம்... இது சாதாரண உள்ளாட்சி தேர்தல் அல்ல. நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் களமிறங்கும் உள்ளாட்சி தேர்தல். ஏற்கனவே அரசியல் கட்சிகளுக்கு இணையான கட்டமைப்பை அணி வாரியாகவும், குழு வாரியாகவும், பூத் வாரியாகவும் இயக்கம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் அடிப்படை பணிகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் விஜய்க்கு இல்லை.
வேடிக்கை பார்த்த... வேவு பார்த்த விஜய்!
இந்த சட்டமன்ற தேர்தலில் களம் காணத் தான் முதலில் விஜய் விரும்பினார். ஆனால் அவர் கொஞ்சம் யோசித்தார். தன்னுடைய வருகை, யாருக்காவது சாதகமாகவோ, பாதகமாகவே போய்விடக்கூடாது. தான் மூன்றாவது இடம் என்கிற நகர்வில் நின்றுவிடக்கூடாது. மாறாக, இரண்டாவது இடம் என்கிற இடத்திலாவது நிற்கவேண்டும் என்று விரும்பினார். அதனால், இந்த தேர்தலை அவர் ஒதுங்கிநின்று வேடிக்கை பார்த்தார். வேவு பார்த்தார். இப்போது அவருக்கு ஒன்று புரிந்துவிட்டது. நாம் அரசியல் செய்வதற்கான நேரம் நெருங்கிவிட்டது. இனி தாமதிக்காமல் களமிறங்கலாம். அதற்கு முன்பாக தனது அரசியல் பயணம், தனது வழிகாட்டுதலில் தான் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதன் வெளிப்பாடு தான், அவரது தந்தை எஸ்.ஏ.சி., உடனான உரசல் என்கிறார்கள். இப்போது லைன் கிளியர். எந்த தலையீடும் இல்லாமல், தன் சுய வழிகாட்டுதலோடு இயக்கத்தை நகர்த்தலாம் என விஜய் தயாரானார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது.ஏற்கனவே தயாராக இருந்த விஜய், இந்த தேர்தலில் முன்னோட்டம் காண, தன் இளைய படையை களமிறக்க முடிவு செய்தார்.
வாழ்த்தி அனுப்பிய விஜய்!
அதன் படி, 9 மாவட்ட தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட அவர் பச்சைக் கொடி காட்டினார். அத்தோடு நிற்கவில்லை. தன் நிர்வாகிகளை வாழ்த்தி வழியனுப்பியிருக்கிறார். விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் இம்முறை ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என அனைத்து பதவிகளுக்கும் வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர். அவர்கள் அனைவரும் சுயேட்சை வேட்பாளர்கள் தான் என்றாலும், விஜய் மக்கள் இயக்க கொடியையும், அதன் பெயரையும் பயன்படுத்தலாம். அதற்கு விஜய் முழு சம்மந்தம் தெரிவித்துள்ளார். அந்தந்த ஊராட்சிகளில் செல்வாக்கான ரசிகரை வேட்பாளராக தேர்வு செய்யவும், அதற்கான ஏற்பாடுகளை உடனே தொடங்கவும் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளுக்கு அவர் அனுமதியளித்துள்ளார். இதனால் விஜய் மக்கள் இயக்கம் தனது ‛கன்னி’ தேர்தலை உள்ளாட்சியில் இருந்து தொடங்குவது உறுதியாகிவிட்டது. தனது வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜய் பிரசாரம் செய்வாரா... அல்லது ஆதரவு கடிதம் தருவாரா... அல்லது அமைதியாக அமர்ந்த வேடிக்கை பார்ப்பாரா என்பது பின்னர் தான் தெரியவரும்.
கட்சியாக மாறுகிறது இயக்கம்!
இதற்கிடையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், மன்ற நிர்வாகிகளை சென்னையில் சந்தித்து தேர்தல் தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டார். அவர்களுக்கு விஜய் தெரிவித்த கருத்துக்கள் பகிரப்பட்டது. தேர்தல் வியூகம், தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகள் அனைத்தும் ஆலோசிக்கப்பட்டது. அனைவரும் மகிழ்ச்சியோடு அந்த கூட்டத்தில் பங்கேற்று கேக் வெட்டி கொண்டாடினர். துவக்கமே கோலகலமாக துவங்கியிருக்கும் நிலையில் விஜய் மக்கள் இயக்கம் தமிழ்நாட்டில் புதிய அரசியல் வரவாக களமிறங்கியிருக்கிறது. அதன் பாய்ச்சலையும், தாக்கத்தையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் விஜய் மக்கள் மன்றம் களமிறங்குவது குறித்து முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசிய போது, ‛தளபதி... வாழ்த்து தெரிவிச்சிட்டாரு... நல்லபடியா ஜெயிச்சுவாங்கனு ஆசி வழங்கிட்டார்.... இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் களம் காணுது. வெற்றி பெறுது. அடுத்த எலெக்சனுக்குள்ள இயக்கம் கட்சியா மாறும்,’ என்றார்.