ஐபிஎல் சீசன் 2021 மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி அக்டோபர் 15-ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.






ANI செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரை தொடங்குவதற்கான தேதியை இறுதி செய்து விட்டதாக தெரிவித்துள்ளது. அதன்படி ஐபிஎல் தொடரின் 30-வது லீக்கு போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கும், யார் சாம்பியன் என தீர்மானிக்கும் இறுதி போட்டி அக்டோபர் 15-ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடர் செப்டம்பர் 15 - அக்டோபர் 15 காலகட்டத்திற்கு உள்ளே நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில், சரியாக எந்த தேதியில் ஐபிஎல் துவங்கும் என்பதை பிசிசிஐ இறுதி செய்துள்ளது.



பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்ததன்படி "அண்மையில் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை நல்லபடியாக நிறைவடைந்துள்ளது. பிசிசிஐ மிகவும் நம்பிக்கையாக உள்ளது துபாய், ஷார்ஜா, அபு தாபி ஆகிய மைதானங்களில் ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படும்"  என்று தகவல் அளித்துளளார். 25 நாள் கால இடைவெளியில் மீதமுள்ள ஐபிஎல் தொடரின் போட்டிகள் அனைத்தும் நடத்தப்படும் என பிசிசிஐ அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.


மேலும் அறிய : ஒலி ராபின்சன் போட்ட சர்ச்சை பதிவு - சர்வதேச கிரிக்கெட் விளையாடத் தடை!


வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்து தகவல் அளித்துள்ள பிசிசிஐ அதிகாரி "அதுகுறித்த பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது, தற்போதைய நிலையில் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்கள் என நம்புகிறோம். ஒரு வேலை வெளிநாட்டு வீரர்கள் சிலர் வரவில்லை என்றால் என்ன செய்யலாம் என்பது குறித்து அதன் பிறகு முடிவெடுக்கப்படும்" என்றுள்ளார். வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்களுடன் அந்நாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறது. பல ஐபிஎல் அணிகள் முன்வைக்கும் முக்கிய பிரச்சனையாக இருப்பது, வெளிநாட்டு வீரர்களின் பங்களிப்பே. ஆனால் ஒரு விறுவிறுப்பான ஐபிஎல் தொடரை எதிர்பார்ப்பதாக பிசிசிஐ அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் மிக விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.