இங்கிலாந்து அணி தற்போது நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ராபின்சன் பங்கேற்க மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இனவெறி மற்றும் பாலியல் ரீதியிலான பதிவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்த காரணத்தால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ராபின்சன் நீக்கப்படுகிறார், அவர் மீது விசாரணை மேற்கொள்ள உள்ளோம் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் நிறைவடைந்த நிலையில், அந்த முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கி 42 ரன்கள் விளாசி, 7 விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்து அணியை இக்கட்டில் இருந்து மீட்டவர் இங்கிலாந்து வீரர் ஒலி ராபின்சன். இவரின் சிறந்த ஆட்டத்தை பலர் பாராட்டிவந்த நிலையில், அவர் முன்னொரு காலத்தில் ட்விட்டரில் பதிந்த சில கருத்துக்கள் அவருக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.


அப்படி என்ன பதிவிட்டார் ராபின்சன் ? 


2012-ஆம் ஆண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் "என்னுடைய முஸ்லீம் நண்பன் ஒரு வெடிகுண்டு" என பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில் 2013-ஆம் ஆண்டு "வீடியோ கேம் விளையாடும் பெண்கள் பாலியல் உறவு அதிகமாக வைத்துக்கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள்" என பதிவிட்டுள்ளார். இது போன்று பாலியல் ரீதியிலான மற்றும் இனவெறியை வெளிப்படுத்தும் விதமான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்கு முன்னர் பதின்பருவத்தின்போது அவர் பதிந்த பதிவுகள் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



அதன் காரணமாகத்தான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நன்னடத்தை நடவடிக்கை மேற்கொள்ள ராபின்சன் நீக்கியுள்ளது. இந்த பதிவுகள் குறித்து மனம் திறந்துள்ள ராபின்சன் "என் வாழ்வின் மிக முக்கியமான நாளில், இது போன்ற பாலியல் மற்றும் இனவெறி கருத்துக்களை பதிவிட்டது குறித்து வெட்கப்படுகிறேன். நான் அப்படிப்பட்டவன் இல்லை" என தெரிவித்துள்ளார். மேலும் "என்னுடைய செயல்பாடுகளுக்கு நான் வருந்துகிறேன், நான் சிந்தனையற்றவனாகவும் பொறுப்பற்றவனாகவும் இருந்துள்ளேன், சரியான மனநிலையில் அந்த நேரத்தில் நான் இல்லை, எனது செயல் மன்னிக்க முடியாதவை" என்றும் ராபின்சன் வருத்தம் தெரிவித்துள்ளார்.


மேலும் அறிய : ”மூணு மேச்சா வெச்சு இருக்கனும்” : இந்தியாவுக்கு பின்னடைவு எனச்சொல்லும் யுவராஜ் சிங்!


"ஒரு காலத்தில் நான் செய்துள்ள யோசனையற்ற செயல், இன்று என் கிரிக்கெட் வாழ்க்கையை களங்கப்படுத்திவிட்டது. கடைசி சில வருடம் கடுமையாக உழைத்து இந்நிலைக்கு வந்தேன், என் கருத்து மூலம் நான் காயப்படுத்திய அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என ராபின்சன் தனது மன்னிப்பை கோரியுள்ளார். இந்நிலையில் இளம் வயதில் அறியாமல் செய்த காரியத்திற்கு இன்று நடவடிக்கை எடுப்பதா என சிலர் ராபின்சனுக்கு ஆதரவாகவும், 18 வயது ஒன்றும் விவரம் தெரியாத வயதில்லை அதனால் நடவடிக்கை அவசியம் என சிலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.