இந்தியா கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடர் வரும் ஜூலை மாதம் 13ஆம் தேதி கொழும்புவில் தொடங்க உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு சென்றதால் இலங்கை தொடருக்கு இளம் வீரர்கள் கொண்ட அணி செல்ல உள்ளது. இந்த அணிக்கு அனுபவ வீரர் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணிக்கு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இந்தத் தொடருக்காக கடந்த மாதம் 28ஆம் தேதி கொழும்பு சென்றது. 


அதன்பின்னர் தனிமைப்படுத்திக்கொண்ட வீரர்கள் மீண்டும் கடந்த 2ஆம் தேதி முதல் பயிற்சியை தொடங்கினர். இந்திய அணிக்குள்ளேயே இரண்டு பயிற்சி போட்டிகளும் நடைபெற்றன. இந்தச் சூழலில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இலங்கை வீரர்கள் கடந்த 6ஆம் தேதி இலங்கை திரும்பினர். அவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். 






இந்நிலையில் இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் கொரோனா பாசிட்டிவ் என்று வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தனியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மற்ற இலங்கை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்தனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. இருப்பினும் இவர்கள் அனைவரும் ஒன்றாக வந்ததால் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கை அணியின் வீரர்கள் வரும் 12-ஆம் தேதி வரை தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும். ஜூலை 13-ஆம் தேதி முதல் போட்டி தொடங்க உள்ளது. இதனால் தொடரின் முதல் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 




ஏற்கெனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக இங்கிலாந்து வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன் காரணமாக பாகிஸ்தான் தொடருக்கு புதிய இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தற்போது இலங்கை பயிற்சியாளருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் அனைவருக்கும் எங்கு இருந்து தொற்று பரவியது என்ற சந்தேகம் வலுக்கத் தொடங்கியுள்ளது. இரு நாட்டு அணி வீரர்களும் பயோபபுள் முறையில் இருந்தப் போது கொரோனா தொற்று எப்படி பரவியது என்ற கேள்வி எழுந்துள்ளது. 


மேலும் படிக்க: சிந்து, பிரணீத் இந்திய இரட்டையர் ஜோடிக்குக் காத்திருக்கும் டஃப் மொமெண்ட்ஸ்..