தமிழ்நாட்டில் கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஆளுங்கட்சியாக பொறுப்பு வகித்து வந்த அ.தி.மு.க. 66 எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்சியாக இடம்பிடித்தது. இந்த தேர்தலில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இடம்பிடித்து இருந்தது. அவர்கள் கூட்டணியில் இடம்பிடித்த பா.ஜ.க. சார்பில் 4 பேரும், பா.ம.க. சார்பில் 6 பேரும் எம்.எல்.ஏ.க்களாக சட்டசபைக்குள் நுழைந்துள்ளனர். சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுடனான கூட்டணியே அ.தி.மு.க.வின் தோல்விக்கு காரணம் என்று பரவலான கருத்துக்கள் அக்கட்சியினர் மத்தியில் இருந்து வந்தது.


இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே உள்ள குருவம்மாபேட்டையில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான களவியூகம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக இந்த கூட்டம் நடைபெற்றது.




அந்த கூட்டத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த காரணத்தாலே அ.தி.மு.க.வினருக்கு சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கவில்லை என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து தெரிவித்து இருந்தார். அவரது கருத்தால் பா.ஜ.க.- அ.தி.மு.க. இடையே கருத்து மோதல் நிலவியது. இதையடுத்து, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் அ.தி.மு.க. தலைமையிலான அதே கூட்டணி தொடரும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.


இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி,.சண்முகம் பா.ம.க.வுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிராக பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் ஒன்றில் அவர் பேசியிருப்பதாவது பாட்டாளி மக்கள் கட்சியினருடன் கூட்டணி வைத்த காரணத்தால்தான் தேர்தலில் தாழ்த்தப்பட்டோர் வாக்குகள் கிடைக்கவில்லை. ஒரு நான்கு தொகுதிகளை எடுத்துக்கொண்டால் பா.ம.க. மற்றும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த காரணத்தால் நாலரை லட்சம் வாக்குகள் கிடைக்காமல் போய்விட்டது. இன்றைக்கு நிலைமை என்ன என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். ஒற்றுமை இல்லை. ஒற்றுமையில்லாத காரணத்தால் அவதிப்பட்டு வருகிறோம் என்று பேசியுள்ளார்.




பா.ஜ.க.விற்கு எதிரான சி.வி.சண்முகத்தின் கருத்தால் ஏற்பட்ட சர்ச்சை தற்போதுதான் அடங்கியுள்ள சூழலில், சி.வி.சண்முகத்தின் பா.ம.க.விற்கு எதிரான கருத்தால் தற்போது அ.தி.மு.க. – பா.ம.க. இடையேயான கருத்து மோதல் போக்கை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் முதல் தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வினருடன் பா.ம.க. மற்றும் பா.ஜ.க.வினர் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் இதே கருத்தை கூறிய காரணத்தால்தான் அ.தி.மு.க. நிர்வாகியான புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது, அதே கருத்தை கூறியுள்ள சி.வி.சண்முகத்தின் மீது கட்சித் தலைமை என்ன நடவடிக்கை எடுக்கும்? என்று புகழேந்தி நேற்று கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.