டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் வரும் 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பேட்மிண்டன் போட்டிகள் வரும் 24ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா சார்பில் சாய் பிரணீத், பி.வி.சிந்து, சிராக் செட்டி, சத்விக் சாய்ராஜ் ஆகிய நான்கு பேர் டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் நேற்று பேட்மிண்டன் போட்டிகளுக்கான வீரர் வீராங்கனைகளுக்கான குழு மற்றும் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து குரூப் ஜே வில் இடம்பெற்றுள்ளார். அவருடன் ஹாங்காங் சீனா வீராங்கனை மற்றும் இஸ்ரேல் நாட்டு வீராங்கனை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குரூப் சுற்றில் வெற்றிப் பெற்ற பிறகு 6ஆம் நிலை வீராங்கனையான சிந்துவிற்கு நாக் அவுட் சுற்று போட்டிகள் மிகவும் கடினமாக அமைந்துள்ளது. காலிறுதியில் இவர் ஜப்பானின் அகேன் யமாகுச்சி, அரையிறுதியில் டைசி ஷூ யிங் ஆகியோரை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் இம்முறை டோக்கியோ ஒலிம்பிக் சிந்துவிற்கு சற்று கடினமாக அமைந்துள்ளது.
அதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் 13ஆம் நிலை வீரரான சாய் பிரணீத் குரூப் டி யில் இடம்பெற்றுள்ளார். இவருடன் நெதர்லாந்து மற்றும் இஸ்ரேல் வீரர்கள் குரூப்பில் இடம்பெற்றுள்ளனர். நாக் அவுட் சுற்று இவருக்கும் கடினமாக அமைந்துள்ளது. ஏனென்றால் இவர் காலிறுதியில் கென்டோ மோமோடோ, அரையிறுதியில் விக்டர் அக்ஸில்சென் அல்லது அண்டர்ஸ் அண்டர்சென் ஆகியோரை எதிர்கொள்ள வேண்டிய நிலை உண்டாகியுள்ளது. இவர்கள் அனைவரும் தரவரிசையில் இவருடைய விட முன்னிலையில் உள்ள வீரர்கள் என்பதால் இவருக்கும் நாக் அவுட் சுற்று கடினமாக அமைந்துள்ளது.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் செட்டி இணைக்கு குரூப் போட்டியே கடினமாக அமைந்துள்ளது. ஏனென்றால் அவர்கள் உலக தரவரிசையில் முதல் நிலை ஜோடியான இந்தோனேஷியாவின் கெவின்-மார்க்கஸ் ஆகியோருடன் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளனர். இதேபிரிவில் மற்றொரு பலம் வாய்ந்த சீன தைபே ஜோடியும் இடம்பெற்றுள்ளது. ஆகவே இந்திய இணைக்கு குரூப் பிரிவு சுற்றை தாண்டுவதே சற்று கடினமாக அமைந்துள்ளது. எனினும் இந்த இரண்டு இளைஞர்களும் கடந்த சில ஆண்டுகளாக முன்னணி ஜோடிகளை தோற்கடித்து வருகின்றனர். இதனால் டோக்கியோவிலும் இவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை ரியோ ஒலிம்பிக் போட்டியில் பி.வி.சிந்து வெள்ளி பதக்கம் வென்றார். இம்முறை பேட்மிண்டனில் இந்தியா எத்தனை பதக்கம் வெல்லும் என்று ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க: அவசர நிலை.. ரசிகர்களுக்கு நோ.. கட்டுப்பாடுகளுடன் தொடங்கும் ஒலிம்பிக்!