சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் கடைசி கட்டத்தில் இந்தியாவிற்காக தங்கப்பதக்கத்தை வென்று தங்கமகனாக திரும்பிய நீரஜ் சோப்ரா, தான் சிறுவயதில் குண்டாக இருந்த தனது உடலை குறைப்பதற்காகவே மைதானத்திற்கு விளையாட வந்து, இன்று நாட்டிற்காக தங்கப்பதக்கத்தை வென்றேன் என்று கூறியபோது அனைவருக்கும் வேடிக்கையாக இருந்தது. ஆனால், முரளிகாந்த் பெட்கர் பாராலிம்பிக்கில் வந்ததற்கு பின்னால் சோகம் மட்டுமே நிரம்பியிருக்கிறது.
பாரலிம்பிக் என்பது மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டி என்பது நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால், முரளிகாந்த் பெட்கர் பிறவியிலேயே மாற்றுத்திறனாளி அல்ல. அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இந்திய ராணுவத்தில் இணைந்தவர். அவர் இந்திய ராணுவத்தில் எலக்டரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் பொறியாளர்கள் படைப்பிரிவில் கிராப்ட்ஸ்மேன் வீரராக பொறுப்பு வகித்தவர்.
1965ம் ஆண்டு இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் போர் நடைபெற்ற சமயம் அது. போர் சமயத்தில் முரளிகாந்த் பெட்கர் தேநீர் அருந்துவதற்காக முகாமில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, திடீரென பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவத்தினர் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். அவர் மீண்டும் முகாமிற்கு திரும்ப முயற்சித்துள்ளார். ஆனால், ஏற்கனவே துப்பாக்கிச் சூடு தொடங்கப்பட்டு விட்டதால், அவர் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.
உடல் முழுவதும் 9 குண்டுகள் துளைக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் முரளிகாந்த் பெட்கரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த போரில் இருந்து உயிருடன் அவர் திரும்பினாலும், அந்த சம்பவம் அவரை வாழ்நாள் முழுவதும் மாற்றுத்திறனாளியாக்கியது. குண்டு தாக்கியதில் அவர் முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டார்.
இதனால், மிகவும் மனமுடைந்த முரளிகாந்த் பெட்கர் தனது வாழ்க்கையில் மீண்டு வருவதற்காக விளையாட்டுகளின் மீது கவனம் செலுத்த தொடங்கினார். ஏனென்றால், அவர் இந்த விபத்திற்கு முன்னதாகவே விளையாட்டுகளில் மிகவும் ஆர்வமாகவே காணப்பட்டவர். பல விளையாட்டுகளில் அவர் ஆர்வமாக காணப்பட்டாலும், அவர் குத்துச்சண்டை போட்டிகளில் மிகவும் சிறந்த வீரராக வலம் வந்தார். 1965ம் ஆண்டு தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியின் பதக்கத்தையும் அவர் கைப்பற்றியிருந்தார்.
போருக்கு பின் முடக்குவாத நோயாளியாக சக்கர நாற்காலியிலே உட்காராமல் தனது வாழ்க்கையை மீண்டும் விளையாட்டு மூலமாகவே தொடங்கினார். இந்த முறை அவர் தேர்வு செய்தது நீச்சல் போட்டியையே.
நீச்சல் போட்டியில் அவர் மேற்கொண்ட கடின பயிற்சி மூலமாக 1972ம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் ஹிடீல்பெர்க்கில் நடைபெற்று பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அவர் ராணுவத்தில் இருந்த காலத்தில் டேபிள் டென்னிசில் மாநில அளவு சாம்பியனாகவும் இருந்தார். மேலும், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் மற்றும் வில்வித்தை போட்டிகளில் சிறந்து விளங்கினார்.
இதனால், பாராலிம்பிக் போட்டியில் நீச்சல் போட்டி மட்டுமின்றி ஈட்டி எறிதல், பனிச்சறுக்கு ஆகிய போட்டிகளிலும் பங்கேற்றார். மூன்று போட்டிகளிலும் அவர் இறுதிப்போட்டிக்கும் முன்னேறினார். நீச்சல் போட்டியில் 50 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் இலக்கை 37.33 விநாடிகளில் கடந்து இந்தியாவிற்காக முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி, தனி நபர் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தினார்.
தங்கப்பதக்கத்தை பெற்ற முரளிகாந்த், நீச்சல்தான் தனது வாழ்விற்கு புதிய அர்த்தத்தை அளித்தது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். முரளிகாந்த் 1970ம் ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க்கில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக காமன்வெல்த் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
நாட்டிற்காக எல்லையிலும் போராடி, நாட்டிற்காக பாராலிம்பிக்கிலும் தங்கப்பதக்கத்தை வென்ற முரளிகாந்த் பெட்கருக்கு 46 வருடங்களுக்கு பிறகுதான் அதற்கான அங்கீகாரமே கிடைத்தது. முரளிகாந்த் பெட்கர் 1972ம் ஆண்டு பெற்ற தங்கப்பதக்கத்திற்காக, 2018ம் ஆண்டுதான் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இந்த விருது குறித்து அப்போது கருத்து தெரிவித்த முரளிகாந்த் பெட்கர், நான் ஒருபோதும் பத்ம விருதுகள் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. இந்த பதக்கத்திற்கு எனக்காக விண்ணப்பித்தவர்கள் யாரென்று எனக்கு தெரியாது. இந்த விருது நிச்சயம் மற்ற பாராலிம்பிக் வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும் என்றார்.