தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மருக்காலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியபாண்டி. இவருக்கும் அதே பகுதியை தங்கச்செல்வி என்பவருடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு 6 வயதில் கார்த்திகேயன் என்ற ஒரு மகனும் பிறந்து 3 மாதங்களே ஆன கனிஷ்கா என்ற பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. தங்கச்செல்வி சிறிது காலமாக மனநலம் பாதிக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மருந்து மாத்திரைகள் உட்கொண்டு வந்துள்ளார்.

 


 

பெரியபாண்டி கேரளாவில் கூலி வேலை செய்து வருவதால் விடுமுறை நாட்கள் கிடைக்கும் போது மட்டும் தான் குடும்பத்தினரை சந்திக்க ஊருக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதன் காரணமாக தங்கச்செல்வி தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் சரியான மருத்துவ பராமரிப்புகள் இன்றி இருந்து வந்த தங்கச்செல்வி இன்று 3 மாத பெண் குழந்தையை தூக்கி கொண்டு கிராமத்தின் அருகே உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 

திடீரென தங்கச்செல்வி மற்றும் கனிஷ்காவை காணவில்லை என கார்த்திகேயன் அக்கம் பக்கத்தினரிடம் தகவல் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் இருவரையும் தேடி வந்துள்ளனர். அப்போது தங்கச்செல்வி மற்றும் குழந்தை கிணற்றில் கிடப்பதை பார்த்த உறவினர்கள் இருவரையும் காப்பாற்ற வெகு நேரம் போராடி பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கும் ஊத்துமலை காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

 


 

தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த சங்கரன்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த தங்கச்செல்வியை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் தண்ணீரில் மூழ்கிய குழந்தையை சாக்கு பை கொண்டு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் மீட்டனர். அப்போது குழந்தை இறந்தது தெரிய வந்துள்ளது.

 

இறந்த குழந்தையின் உடலை  பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த ஊத்துமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்று மாத குழந்தையுடன் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற தங்கச்செல்வியை காப்பாற்றிய போதிலும் மூன்று மாத குழந்தை தண்ணீரில் துடிதுடித்து இறந்த சம்பவம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ஆழ்ந்த சோகத்தையும் பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

இச்சம்பவம் குறித்து தங்கசெல்வியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே நாம் விசாரித்த போது, தங்கசெல்வி சரியாக மருந்து மாத்திரைகள் உட்கொள்ளும் போது மட்டும் தான் சற்று இயல்பான மனநிலையில் இருந்ததாகவும் மற்ற நேரங்களில் தொடர்ந்து மருந்து மாத்திரைகள் எடுத்துகொள்வது இல்லை என்றும் அடிக்கடி இது போன்ற செயலில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே திருமணம் ஆன 6 மாதத்திலேயே தங்கசெல்வி இது போன்று  தற்கொலைக்கு முயன்று அக்கம் பக்கத்தினரால்  காப்பாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது