தூத்துக்குடி பகுதியில் உள்ள தனியார் பெயிண்ட் தயாரிக்கும் நிறுவனத்துக்கு ஒரு லாரி வந்தது. அந்த லாரியில் முறைகேடாக இல்மனைட் தாதுமணல் கடத்தி கொண்டு வரப்படுவதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிப்காட் போலீசார் அந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் சுமார் 9 டன் தாதுமணல் இருந்தது. இதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு மேலும் 4 லாரிகளில் கொண்டு வரப்பட்ட தாதுமணல் வைக்கப்பட்டிருந்தது. 



 

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில், எஸ்பி ஜெயக்குமார், கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், வட்டாட்சியர் ஜஸ்டின், மதுரை கனிம வள துணை இயக்குநர் சட்டநாதன் சங்கர், புவியியல் அலுவலர் சுகிர்தா ரஹிமா மற்றும் போலீசார் அந்த நிறுவனத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். அந்த தாதுமணல் கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் உள்ளதா, உரிய அனுமதி பெறப்பட்டு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த தாதுமணல் மாதிரி சேகரிக்கப்பட்டு மதுரையில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது 



 

மேலும் கடந்த 2013ஆம் ஆண்டு தூத்துக்குடி, முத்தையாபுரம் உள்ளிட்ட சில குடோன்களில் வைக்கப்பட்டிருந்த தாதுமணல் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது. அதனை எடுப்பதற்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் அந்த குடோன்களில் இருந்து தாதுமணல் எடுத்து வரப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது குறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் குடோன்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

 

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட கனரக வாகனங்கள் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. நள்ளிரவில் இது குறித்து மீளவிட்டான் கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ் கண்ணாவின் புகாரின்படி விவி நிறுவன உரிமையாளர், 5 லாரி டிரைவர்கள், மற்றும் சிலர் மீது  வழக்குப்பதிவு செய்தனர். இதில் லாரி ஓட்டுநர்கள் இசக்கி, மாரிமுத்து, முருகன், சடையாண்டி, செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் துறைமுக சாலையில் உள்ள விவி குடோன் சூபர்வைசரான கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு சூரங்குடியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரையும் கைது செய்தனர்.