இணையதளம் எவ்வளவு ஆபத்தானது என்று மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. ஆசிய சாம்பியன் போட்டி, உலக சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த மல்யுத்த வீரர் அன்ஷூ  மாலிக், கடந்த 2 நாட்களாக சமூக வலைத்தளங்களில் மோசமான சூழ்நிலையை சந்தித்து வருகிறார். 


அன்ஷூ மாலிக்கின் முகத்தை மார்பிங் செய்து 30 வினாடிகள் கொண்ட ஆபாச வீடியோ ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப்பற்றி அறிந்த அன்ஷூவின் தந்தை தரம்வீர், ஹரியானா மாநிலம் ஜிண்ட் பகுதியில் உள்ள சதர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்தார். இந்த வழக்கு தொடர்பால ஜிண்ட் பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாக டிஎஸ்பி ரவி குந்தியா தெரிவித்தார். வைரலாகி வரும் வீடியோ முற்றிலும் போலியானது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் இதுபோன்ற வீடியோவை யாரேனும் ஃபார்வேர்டு செய்தாலோ, சேனலில் பதிவேற்றினாலோ அவர் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


இதுகுறித்து அன்ஷூவின் மாமா சந்தீப் மாலிக் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “எங்கள் வீட்டை சேர்ந்த 22 வயது பெண்ணின் புகைப்படத்தை எடுத்து மார்பிங் செய்யப்பட்டது. அந்த வீடியோவில் இருந்த பெண் மற்றும் ஆண் வேறு நபர்கள். மேலும், அது இரண்டு பழமையான வீடியோ. வீடியோவில் காட்டப்பட்டுள்ள ஜோடிகள் இப்போது கணவன் - மனைவி. அந்த பெண் இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர், பையன் ஹரியானாவைச் சேர்ந்தவர்.


வீடியோவில் அன்ஷுவின் படம் டெம்ப்ளேட்டாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளோம். இதை ஏற்க முடியாது... அன்ஷு உலகத்தரம் வாய்ந்த மல்யுத்த வீராங்கனை. போலியை பயன்படுத்தி யாரோ அவரது பெயரை இழிவுபடுத்துகின்றனர். காவல்துறை விரைவில் இந்த விஷயத்தை தீர்க்கும் என்று நான் நம்புகிறேன். இந்த நேரத்தில் எங்கள் முழு குடும்பமும் அதிர்ச்சியில் உள்ளது.” என்றார். 


முற்றிலும் மறுப்பு தெரிவித்த அன்ஷூ மாலிக்: 


இது தொடர்பாக பேசிய அன்ஷூ மாலிக், "ஒரு முக்கியமான விஷயத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கடந்த சில நாட்களாக நான் என்று ஒரு போலி வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் நான் இல்லை என்பதை இங்கு சொல்லிவிடுகிறேன். என்னை இழிவுபடுத்தும் அப்பட்டமான முயற்சி நடந்துள்ளது. இது மிகப்பெரிய சதி. அந்த வீடியோவில் இருக்கும் சிறுவன் ஹரியானாவைச் சேர்ந்தவர் மற்றும் பெண் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர்.


இருவரும் இப்போது தம்பதிகளாக உள்ளனர். இருவரும் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். அந்த அறிக்கைகளை போலீசார் சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளனர். இவர்கள் இருவரின் வீடியோவில் எனது பெயரையும் சேர்த்து வீடியோவை வைரலாக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 


நான் குற்றமற்றவள் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் அளித்துள்ளேன். என்னுடையது இல்லாத காணொளி என்னுடையது எனக் கூறி மக்கள் மிகவும் கேவலமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். நானும் என் குடும்பமும் என்ன பாடு படுகிறோம் என்று ஒருமுறை கூட அந்த மக்கள் நினைக்கவில்லையா? நானும் என் குடும்பமும் என்ன மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்போம்? உண்மை தெரியாமல் சமூகத்தின் முன் என்னை குற்றவாளி என்று அறிவித்தது யார்? என கேள்வி எழுப்பினார். 


நாளை உங்கள் வீட்டு பெண்ணுக்கும் இது நடக்கலாம்..?


தொடர்ந்து பேசிய அவர், “இதுவரை நான் வென்ற பதக்கங்கள் மற்றும் விருதுகளை மக்கள் தவறான முறையில் வென்றதாக நினைக்கிறார்கள். நானும் எனது குடும்பத்தினரும் மிகுந்த கடின உழைப்பால் இந்த சாதனைகளை அடைந்துள்ளோம். நாட்டிற்கு பெருமை சேர்ப்பதில் என்னால் பங்களிக்க முடியும் என்ற கனவு எனக்கு இருந்தது. என் மகள் நாட்டிற்காக ஏதாவது செய்து இறக்க வேண்டும் என்று என் பெற்றோர் ஆரம்பத்திலிருந்தே என்னை ஊக்கப்படுத்தினர். அவள் ஏதாவது நல்லது செய்தால், மக்கள் அவளை நினைவில் கொள்வார்கள். எனது பெற்றோர் தங்கள் வேலையை விட்டுவிட்டு மகளின் கனவை நிறைவேற்ற இரவு பகலாக உழைத்துள்ளனர்.


இந்த விஷயத்தில் என்னை அவதூறு செய்ய சதி நடப்பதை அறிந்த எனது பெற்றோரும் எனது நெருங்கிய நண்பர்கள் இன்னும் என்னுடன் ஆதரவாக நிற்கிறார்கள். இன்னும் மக்கள் உண்மை தெரியாமல் இது போன்ற கேவலமான கருத்துக்களை கூறி வருகின்றனர். இது என்னை இழிவுபடுத்தும் மாபெரும் சதி என்றுதான் என்னால் சொல்ல முடியும்.


நான் சில சதியால் துடிதுடித்து போனேன், இது இன்று எனக்கு நடந்தது. நாளை வேறு பெண்ணுக்கு நடக்கலாம். என்னைப் பற்றி கேவலமாக கருத்து தெரிவித்தவர்கள், தங்கள் வீட்டில் உள்ள தங்கைகள், மகள்களுக்கு கூட இந்த சம்பவம் நடக்கலாம். உண்மையை அறியாமல் எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்தார்.