இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் கவுண்டி கிளப் போட்டிகள் மிகவும் பிரபலமானது ஆகும். இந்த தொடரில் இங்கிலாந்து வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் ஆடி வருகின்றனர். இந்தியாவின் புகழ்பெற்ற பேட்ஸ்மேனான புஜாரா கவுண்டி கிளப் தொடரில் ஆடி வருகிறார்.


புஜாரா சஸ்பெண்ட்:


வீரராக மட்டுமின்றி சஸ்செக்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளார். கவுண்டி கிளப் விதிப்படி, ஒரு அணி 4 பெனால்டிகளை பெற்றால் அந்த அணிக்கு 12 புள்ளிகள் குறைக்கப்படுவதுடன் அந்த அணியின் கேப்டனும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவார் என்பது விதியாகும். வீரர்கள் களத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் இவ்வாறு பெனால்டி விதிக்கப்படுகிறது. இந்த நிலையில், புஜாரா கேப்டனாக உள்ள சஸ்செக்ஸ் அணி 4-வது முறையாக பெனால்டியை பெற்றது.


இதன் காரணமாக, சஸ்செக்ஸ் அணியின் கேப்டனும் புஜாரா கவுண்டி கிளப் தொடரில் இருந்து ஒரு மாதத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வீரர்களின் நடத்தை விதிகள் காரணமாக இந்த பெனால்டி தண்டனை விதிக்கப்படுகிறது. சஸ்செக்ஸ் அணியின் ஜேக் கார்சன், டாம் ஹெய்ன்ஸ், அரி கார்வேலஸ் ஆகியோரால் 3 பெனால்டிகளை பெற்ற சஸ்செக்ஸ் அணி தற்போது 4வது பெனால்டியை பெற்றது.


சஸ்செக்சுக்கு பின்னடைவு:


12 புள்ளிகளை இழந்ததுடன் கேப்டன் புஜாரா ஒரு மாத காலத்திற்கு இடை நீக்கத்திற்கு ஆளாகியிருப்பது சஸ்செக்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அடுத்தடுத்த போட்டிகளில் புதிய வீரர்களுககு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கவுண்டி கிளப் தொடரில் அசத்தலாக ஆடி வரும் 36 வயதான புஜாரா கவுண்டி கிளப்பில் சஸ்செக்ஸ் அணிகள் மட்டுமின்றி டெர்பிஷையர், யார்க்ஷையர் அணிகளுக்காகவும் ஆடியுள்ளார். 256 முதல்தர போட்டிகளில் 60 சதங்கள், 77 அரைசதங்களுடன் 19 ஆயிரத்து 533 ரன்களும், லிஸ்ட் ஏ போட்டியில் 124 போட்டியில் ஆடி 16 சதங்கள், 33 அரைசதங்களுடன் 5638 ரன்களும் எடுத்துள்ளார். இதுதவிர, சர்வதேச அளவில் 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 19 சதங்கள், 35 அரைசதங்களுடன் 7 ஆயிரத்து 195 ரன்களும், 5 ஒருநாள் போட்டியில் ஆடி 51 ரன்களும் எடுத்துள்ளார்.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பிறகு இந்திய அணிக்காக புஜாரா ஆடவில்லை. கவுண்டி கிளப் போட்டிகளில் சிறப்பாக ஆடிய காரணத்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அசத்தலாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட புஜாரா ஏமாற்றத்தையே ஏற்படுத்தினார். அதன்பின்பு நடந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. 


எதிர்கால இந்திய அணியை கட்டமைக்கும் பொருட்டு புஜாராவிற்கு இனி வரும் இந்திய அணியில் இடம் வழங்கப்படுவது கேள்விக்குறி என்றே தகவல்கள் வெளியாகி வருகிறது. 


மேலும் படிக்க: Yuvraj Singh 6 Sixes: ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள்.. போட்ட பந்தெல்லாம் ஆகாயம் நோக்கி.. இதே நாளில் கெத்து காட்டிய யுவராஜ் சிங்!


மேலும் படிக்க: Team India Squad: 20 மாதங்களுக்குப் பிறகு அஸ்வின்.. மீண்டும் கேப்டனாக கே.எல். ராகுல்; ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி