இந்திய மகளிர் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. அதில் டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் மழை குறுக்கிட்டதால் டிஎல் முறைப்படி இந்திய மகளிர் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தச் சூழலில் இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தானா மற்றும் ஷெஃபாலி வர்மா இங்கிலாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். 


குறிப்பாக ஆட்டத்தின் 4ஆவது ஓவரை கேத்ரின் ப்ரிண்ட் வீசினார். அதில் ஷெஃபாலி வர்மா 5 பவுண்டர்களில் விளாசினார். 5 ஓவர்களில் இந்திய மகளிர் அணி விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்தன. இதனால் பெரிய இலக்கை எட்டும் எதிர்பாக்கப்பட்ட நிலையில் ஸ்மிருதி மந்தனா 20 ரன்களுடனும், ஷெஃபாலி வர்மா 48 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக இந்திய அணியின் ரன் விகிதம் சற்று குறைந்தது. எனினும் அடுத்த வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிப்படுத்தினார். 




அவர் இரண்டு பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் விளாசி 25 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. தீப்தி சர்மா ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் எடுத்தார். இதை தொடர்ந்து 149 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனை டெனியலா வாட் 3 ரன்களுடன் அருந்ததி ரெட்டி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ஸ்கிவரும் 1 ரன்னில் ரன் அவுட் ஆனார். இதனால் சற்று தடுமாறிய இங்கிலாந்து அணியை கேப்டன் ஹீதர் நைட் மற்றும் பியூமவுண்ட் ஜோடி சரிவிலிருந்து மீட்டது. 




இருவரும் மூன்றாவது விக்கெட்டிற்கு 75 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து மகளிர் அணி 13 ஓவர்களில் 100 ரன்களை கடந்து இருந்தது. இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பறிபோகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த சமயத்தில் 14 ஓவரை வீசிய தீப்தி சர்மா முதலில் பியூமவுண்ட்(59) விக்கெட்டை எடுத்தார். அடுத்த பந்திலேயே கேப்டன் ஹீதர் நைட்டை(30) ரன் அவுட் செய்தார். இதன் காரணமாக ஆட்டத்தின் போக்கே மாறியது. பின்னர் வந்த இங்கிலாந்து வீராங்கனை மளமளவென்று விக்கெட்டை பறி கொடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய பூனம் யாதவ் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. மேலும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது. 


மேலும் படிக்க: ’கொரோனா வந்த உங்களுக்குப் பதக்கம் கிடையாது’ - ஒலிம்பிக்கில் இது புதுசு!