கடந்த 2021ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதி வரை முன்னேறியது. ஆனால், இந்த இரண்டரை வருட காலத்திற்குள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு கூட தகுதி பெற முடியாத அளவுக்கு இந்திய மகளிர்  ஹாக்கி அணி பரிதாப நிலைக்கு சென்றுள்ளது. இது தற்போது இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கும், ஒவ்வொரு இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 


என்ன நடந்தது..? 


ஜனவரி 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) இந்திய மகளிர் ஹாக்கி அணி இந்தாண்டு நடைபெறும் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற ஜப்பானை தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் தோல்வியை சந்தித்தது. இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதனால், கோடிக்கணக்கான இந்திய விளையாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை சுக்குநூறாக உடைத்தது ஜப்பான். இந்திய அணிக்கு நேற்றைய போட்டியில் 9 பெனால்டி கார்னர்கள் கிடைத்தாலும் அதில் ஒன்றைக் கூட கோலாக மாற்ற முடியவில்லை. மறுபுறம், ஜப்பானின் கனா உராடா பெனால்டி கார்னரில் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு வெற்றியை தேடி தந்தார். 






இந்த போட்டியின் முடிவு இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பாதகமாக அமைந்தது. இத்துடன் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான இந்திய மகளிர் ஹாக்கி அணியின் நம்பிக்கையும் முடிவுக்கு வந்தது. 


ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறாத இந்திய அணி: 


கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் நான்காவது இடம் பிடித்து சாதனை படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணியால் இன்று பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு கூட தகுதி பெற முடியாமல் போன இரண்டரை ஆண்டுகளில் என்ன நடந்தது? கடந்த 2023 ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்திய மகளிர் ஹாக்கி அணியில் குழப்பம் நிலவி வருகிறது. ராணி ராம்பால் போன்ற மூத்த வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டாலும் இந்திய அணியில் இடம் பெறவில்லை. ஒரு நேர்காணலின்போது ராணி ராம்பாலிடம் செய்தியாளர்கள் ஏன் நீங்கள் இந்திய அணியில் இடம் பெறவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராணி ராம்பால், இந்த கேள்விக்கு தலைமை பயிற்சியாளர் ஜானினேகே ஷாப்மேன் மட்டுமே பதிலளிக்க முடியும் என்று கூறியிருந்தார். இதையடுத்து, இவருக்கும் பயிற்சியாளருக்கும் இடையே ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருந்ததாக ஊடகங்கள் கருத்து தெரிவித்து வந்தன.


தொடர்ந்து, இந்த தலைப்பு செய்திகளை முடிவுக்கு கொண்டு வர ஆசிய சாம்பியன்ஷிப் பயன்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 2023 ஆசிய சாம்பியன்ஷிப்பை வென்றபோது, இந்த பேச்சுகள் அனைத்தும் முடிவுக்கு வந்தது. மேலும், கடந்த ஆண்டே, இந்திய மகளிர் ஹாக்கி அணியும் தனது சிறந்த தரவரிசையை (6) எட்டியிருந்தது. ஜனவரி 13 முதல் ராஞ்சியில் 8 அணிகளுக்கு இடையே தொடங்கிய ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆட்டங்களில் இந்தியா இரண்டாவது சிறந்த அணியாக கருதப்பட்டது.  ஆனால், இந்த போட்டியில் இந்திய அணி திடீரென தோற்கடித்த அணிகளிடமே தோற்கடிக்கப்பட்டது என்னவென்று தெரியவில்லை. இதனால், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது. இதற்கு கவனக்குறைவு, உத்தியின்மை, குழு நிர்வாகத்தில் உள்ள சிக்கல்கள், வாரியத்தின் சில தவறுகள் போன்ற அனைத்தும் என்று கூறப்படுகிறது. வரும் காலங்களில் இவை அனைத்தையும் சரி செய்யப்பட்டு இந்திய மகளிர் ஹாக்கி மீண்டும் எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.