நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் இறந்தார். விஜயகாந்த்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட நடிகரும் மக்கள் நீதிமய்யம் தலைவருமான கமல் ஹாசன் பேசியதாவது, 


” இப்படி ஒருநாளை எதிர்பார்க்க முடியாது, இதற்கு ஒத்திகை எதுவும் பார்க்க முடியாது.  நான் முதலில் விஜயகாந்தினை சந்தித்தபோது என்னிடம் எப்படி பேசினாரோ, அப்படித்தான் அவர் உச்சநட்சத்திரம் ஆன பின்னரும் பேசினார். விஜயராஜ்க்கும் விஜயகாந்திற்கும் வித்தியாசமே தெரியாமல் இருந்ததற்கு காரணம் நான் அல்ல, அவர்தான். அவரைப் பற்றி சொல்லவேண்டும் என்றால், பல விமர்சனங்களையும் அவமானங்களையும் பார்த்து மேலோங்கி வந்தவர். அதற்காக எந்த காழ்ப்பையும் அவர் வைத்துக் கொள்ளாமல், தனக்கு ஏற்பட்ட அவமானம் வேறு யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் முனைப்பாக இருந்தவர். இதில் பாராட்டவேண்டிய விஷயம், நாம கடந்து வந்துவிட்டோம் அவரவர் அவரவர் பாதைகளை பார்த்துக்கொள்ளட்டும் என்று இல்லாமல் அவர்களுக்காக போராடும் ஒருகுரல் விஜயகாந்த். அவர் நட்சத்திரம் ஆனார் என்பது அவரது உழைப்பில் வந்தது என்றாலும், ஆரம்ப நடிகர்களுக்கு கடைநிலை நடிகர்களுக்கு விஜயகாந்த் ஒரு குரலாக இருந்தார். தமிழ்நாடு பெரிய அரசியல் தலைவர்களுக்கு எல்லாம் வந்த கூட்டம் இவருக்காவும் வந்ததைப் பார்த்தேன். விஜயகாந்த் சேர்த்த சொத்து என்றால் அதுதான். 


விஜயகாந்த் மற்றவர்களுக்கு உதவுவது பலருக்குத் தெரியாது. நாளிதழில் கட்டுரை ஒன்று வந்திருந்தது. 1998ஆம் ஆண்டு விஜயகாந்த் பிறந்த நாளில் நடந்தது. பொறியியல் கல்லூரியில் படிக்க சீட் கிடைத்தும் பணமில்லாததால் படிக்க முடியாத மாணவர்கள் பற்றிய செய்தியைப் பார்த்துவிட்டு, அந்த மாணவர்களின் விடுதி, கல்லூரி செலவு என அனைத்தையும் ஏற்பாடு செய்துள்ளார். இன்றைக்கு அந்த மாணவர்கள் நடுத்தர வயதை எய்தியிருப்பார்கள். அவர்களும் இன்றைக்கு குழந்தை பேறுகளுடன் நன்றாக இருப்பார்கள் என நினைக்கின்றேன். இதனையாரும் மறக்கமாட்டார்கள். 


70, 80களில் சமூக, அரசியல் கோபங்களை பிரதிபலிக்கும் ஒரு சினிமா உருவமாக விஜயகாந்த் திகழ்ந்துள்ளார். விஜயகாந்த் மறைந்த தினத்தில் அவரது பூத உடல் கோயம்பேட்டில் வைத்திருந்தபோது நான் கூறினேன், அவரது குணங்களில் எனக்கு மிகவும் பிடித்த குணம் அவரது துணிச்சல். கோபம் வந்துவிட்டால் கிராமத்து மனிதரைப் போல் நாக்கை மடக்கிகொண்டு கேட்கவேண்டியதை கேட்டுவிடுவார். அது எந்த மன்றமாக இருந்தாலும் சரி. அந்த துணிச்சல் பல நேரங்களில் நடிகர் சங்கத்திற்கே உதவியுள்ளது. அதற்கு சாட்சி இங்கே இருக்கும் நடிகர்கள்தான். 


விஜயகாந்த் நடித்த முதல் படமான தூரத்து இடிமுழக்கம் விருது விழாவிற்குச் சென்றது. அதன் பின்னர் அவர் கமர்ஷியல் ஹிரோவாக மாறினார். ராதாரவி இப்போது குறிப்பிட்டதைப் போல் துணை நடிகர்களிடம் ஒரு காட்சியை எப்படி சிறப்பாக எடுக்கலாம் என்பது கேட்பார் என்பதில் இருந்தே தெரிகின்றது. நானே அவருடன் ஒரு கெஸ்ட் ரோல்தான் செய்துள்ளேன். அங்கு அவர் என்னை கவனித்துக் கொண்ட விதம் இன்றும் ரீங்கரிக்கின்றது. அவருக்கு இருந்த நண்பர்கள் இங்கே கூடியுள்ளார்கள். அவருக்கு புடிக்காத மனிதர்களை கூட கூப்பிட்டு பேசி விடுவார். அந்த அளவிற்கு தைரியம் உள்ளவர். அந்த மாதிரியான குணாதியங்களை நாம் பிரதிபலிக்கலாம், காப்பியடிக்கலாம் தப்பில்லை. அவர்போல் இல்லை என்று சொல்வது வழக்கம், அவர் போல் இருக்க முயற்சி செய்வோம். குட் பை விஜயகாந்த், குட் பை கேப்டன்” இவ்வாறு பேசினார்.