தடகளத்தில் பி.டி.உஷா, அஞ்சு பாபி ஜார்ஜ் போன்ற வீராங்கனைகளுக்கு பிறகு தற்போது உலக அளவில் மீண்டும் இரண்டு இந்திய வீராங்கனைகள் எழுச்சிப் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர்தான் 100 மீட்டர் ஓட்டப் பந்தைய வீராங்கனை டூட்டி சந்த். இவர் நேற்று தன்னுடைய உலக தரவரிசையின் படி 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளார். 


இந்நிலையில் யார் இந்த டூட்டி சந்த்? எந்தெந்த தடைகளை தாண்டி சாதித்தார்?


இளம் பருவம்: 


1996ஆம் ஆண்டு  ஒடிசா மாநிலத்தில் ஒரு நெசவு தொழில் செய்யும் குடும்பத்தில் டூட்டி சந்த் பிறந்தார். சிறுவயதில் தன்னுடைய அக்கா சரஸ்வதியை பார்த்து ஓட்டப்பந்தயத்தில் அதிக ஆர்வத்துடன் டூட்டி சந்த் இருந்துள்ளார். இதன் காரணமாக அவர் வீட்டிற்கு அருகே இருந்த ஏரி பகுதிகளில் வெறும் கால்களில் ஓடி பயிற்சி செய்து வந்தார்.  இவர் முதல் முறையாக 2012ஆம் ஆண்டு யு-18 தேசிய 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் பதக்கம் வென்று முதல் முறையாக வெளிச்சம் பெற்றார். 




இதனைத் தொடர்ந்து 2013ஆம் ஆண்டு ஆசிய தடகள போட்டிகள் மற்றும் உலக யூத் தடகள போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். அதன்பின்னர் 2014ஆம் ஆண்டு ஆசிய ஜூனியர் தடகள போட்டியில் 2 தங்கப் பதக்கங்கள் வென்று அசத்தினார். அத்துடன் உலகளவில் பிரபலம் அடைய தொடங்கினார். 


பெண் சர்ச்சை:


2014ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளுக்காக டூட்டி சந்த் தயாராகி கொண்டிருந்தார். அப்போது இவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. அதற்கு காரணமாக இவருடைய உடம்பில் அதிகளவில் ஆண்களுக்கான ஹார்மோன் இருந்ததாக கூறப்பட்டது. இதனால் இவர் பெண்கள் தடகள போட்டியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து டூட்டி சந்த் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டார். 2015ஆம் ஆண்டு அந்த வழக்கில் வெற்றி பெற்று தடையை நீக்க செய்தார். 




சர்ச்சைக்கு பிறகு சாதனை:


2016ஆம் ஆண்டு தேசிய ஃபெட் கோப்பை தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 11.33 விநாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் 16 ஆண்டுகளாக இருந்த ரசிதா மிஸ்ட்ரியின் தேசிய சாதனையையும் முறியடித்தார். அதன்பின்னர் நடைபெற்ற மற்றொரு தேசிய தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 11.24 விநாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனையுடன் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதியையும் பெற்றார். 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் சுற்றிலேயே வெளியேறினார். எனினும் 36 ஆண்டுகளுக்கு ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். 


தன்பாலின உறவு சர்ச்சை:


ஒலிம்பிக் ஏமாற்றத்திற்கு பிறகு மீண்டும் 2018ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டு வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார். 1986ஆம் ஆண்டில் பிடி உஷாவிற்கு பிறகு இப்போட்டியில் 100 மீட்டர் இறுதிக்கு தகுதி பெற்ற முதல் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார். இதன்பின்னர் 2019ஆம் ஆண்டு சர்வதேச பல்கலைக் கழக போட்டியில் 23 வயதான டூட்டி சந்த் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தினார்.




சர்வதேச போட்டியில் 100 மீட்டர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் இவர் பெற்றார்.  இதே ஆண்டில் டூட்டி சந்த் தன்னுடைய தன்பாலின உறவு தொடர்பாக வெளிப்படையாக அறிவித்தார். அப்போது இவர் மீது பல விமர்சனங்கள் எழத் தொடங்கியது. எனினும் அதை எதுவும் பொருட்படுத்தாமல் மீண்டும் தடகள விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியில் 11.17 விநாடிகளில் 100 மீட்டர் தூரத்தை கடந்திருந்தார். 


தற்போது 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக தரவரிசையில் 44ஆவது இடத்திலும், 200 மீட்டரில் 51 இடத்திலும் டூட்டி சந்த் உள்ளார். உலக தரவரிசை மூலம் 100 மீட்டரில் 22 பேரும், 200 மீட்டரில் 15 பேரும் தேர்வாக உள்ளனர். அதில் டூட்டி சந்தும் ஒருவர் என்பதால் அவர் இரண்டாவது முறையாக ஒலிம்பிக் தொடருக்கும் செல்லு வாய்ப்பு உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு முறையும் சர்ச்சைகளுக்கு தன்னுடைய விளையாட்டின் மூலம் டூட்டி பதிலளித்து வருவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Tokyo Olympics Updates: இந்தியாவைச் சேர்ந்த 3 பேர் இன்று ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ச்சி!