2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.


இந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக் தொடரை நடத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது.






இந்நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்தும் ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்தியாவைப் பொருத்தவரை, பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக்ஸ் தொடருக்கு தேர்ச்சி பெற்று வருகின்றனர்.






தடகளத்தில், இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேர் இன்று ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். 100 மீ, 200 மீ ஓட்டப் பந்தயத்தில் டூட்டி சந்த், ஈட்டி எறிதல் போட்டியில் அன்னு ராணி மற்றும் 400 மீ தடை தாண்டும் ஓட்டத்தில் எம்.பி ஜபீர் ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.






ஒலிம்பிக் தேர்ச்சிக்கு தேவையான நேரத்தை டூட்டி சந்த் பூர்த்தி செய்யாததால், தடகளத்தில் உலக தரவரிசை பட்டியலின் அடிப்படையில் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ச்சி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஒலிம்பிக் தொடருக்கான 100 மீ ஓட்டத்தில் இன்னும் 22 இடங்களும், 200 மீட்டர் ஓட்டத்தில் 15 இடங்களும் காலியாக இருப்பதால், ரேங்கிங் அடிப்படையில் டூட்டி தேர்ச்சி பெற்றுள்ளார்.  இதே போல, உலக தரவரிசை அடிப்படையில், ஈட்டி எறிதல் போட்டியில் அன்னு ராணியும், தடை தாண்டும் ஓட்டத்தில் ஜபீர் ஆகியோரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.