இந்திய பேட்மிண்டன் உலகில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் இளம் வீரர்களில் ஒருவர் லக்ஷ்யா சென். 20 வயதான இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகளவில் பல்வேறு தொடர்களில் சிறப்பான வெற்றிகளை குவித்து வருகிறார். அந்த வகையில் இந்தாண்டும் கொரோனா பெருஞ்தொற்றுக்கு பிறகு நடைபெறும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் ஆண்டின் இறுதியில் நடைபெறும் பிடபிள்யூஎஃப் உலக டூர் ஃபைனல்ஸ் தொடருக்கு இவர் தகுதி பெற்று அசத்தியுள்ளார். இந்தத் தொடருக்கு மிகவும் குறைந்த வயதில் தகுதி பெறும் முதல் வீரர் இவர் தான். 2019ஆம் ஆண்டு 4 சர்வதேச போட்டிகளில் பட்டங்களை வென்று அசத்தினார். அதன்பின்னர் கொரோனா பெருஞ்தொற்று காரணமாக போட்டிகள் நடைபெறுவது குறைந்தது.
மீண்டும் இந்தாண்டு முதல் நடைபெற்ற பேட்மிண்டன் உலக தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக துபாய் ஓபன் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அதில் சிங்கப்பூர் வீரரிடம் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். அதன்பின்பு டென்மார்க் மாஸ்டர்ஸ் மற்றும் ஹைலோ ஓபன் ஆகிய இரண்டு தொடர்களிலும் அரையிறுதி போட்டி வரை முன்னேறி அசத்தினார்.
அத்துடன் தற்போது கடைசியாக நடைபெற்று வரும் இந்தோனேஷியா ஓபன் தொடரில் உலக தரவரிசையில் முதல்நிலை வீரரான கென்டோ மோமோட்டாவை எதிர்கொண்டார். அந்தப் போட்டியில் உலக தரவரிசையில் முதல் நிலை வீரரை சற்று திணறடித்தார். அந்தப் போட்டியை கென்டோ மோமோட்டோ 21-23,15-21 என்ற கணக்கில் போராடி வென்றார். இந்தோனேஷிய ஓபனில் விரைவாக தோல்வி அடைந்திருந்தாலும் மற்ற தொடர்களில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் முதல் முறையாக பேட்மிண்டன் உலக தரவரிசையில் டாப் 20ல் நுழைந்தார். மேலும் இந்தோனேஷிய ஓபன் தொடரில் சீன தைபேயின் சோ சென் தோல்வி அடைந்ததன் மூலம் லக்ஷ்யா சென் உலக டூர் ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
பேட்மிண்டன் உலக டூர் ஃபைனல்ஸ் போட்டி 2018ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடருக்கு இதற்கு முன்பாக இந்தியாவிலிருந்து பி.வி.சிந்து,சாய்னா நேவால்,ஶ்ரீகாந்த், சமீர் வர்மா ஆகியோர் தகுதி பெற்று விளையாடியுள்ளனர். அதில் சிந்து 2018ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றார். ஶ்ரீகாந்த் மற்றும் சமீர் வர்மா நாக் அவுட் சுற்றுக்கு மட்டும் முன்னேறியுள்ளனர். அவர்கள் இருவரும் அரையிறுதி அல்லது இறுதி போட்டிக்கு முன்னேறியதில்லை.
இந்த ஆண்டிற்கான உலக டூர் ஃபைனஸ்ல் போட்டி வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இம்முறை இந்தியா சார்பில் பி.வி.சிந்து, கிடாம்பி ஶ்ரீகாந்த், லக்ஷ்யா சென், அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி ஆகியோர் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ‛கடவுள் பாதி..மிருகம் பாதி..’ - நியூசிலாந்து ஆல் ரவுண்டர் ரச்சினுக்கு ஏன் அந்தப் பெயர் தெரியுமா?