இந்திய ஹாக்கி விளையாட்டில் பல மேஜர் தயான்சந்த், பல்பீர் சிங் போன்ற பல ஜாம்பவான் வீரர்கள் களமிறங்கியுள்ளனர். அந்த வரிசையில் ஒரு முக்கியமான இடத்தில் இருப்பவர் தன்ராஜ் பிள்ளை. இவர் இன்று தனது 53ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தச் சூழலில் இந்த ஹாக்கி ஜாம்பவானின் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை என்ன?
இளம் பருவம்:
1968ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் வசித்து வந்த நாகலிங்கம் பிள்ளை மற்றும் ஆண்டாளம்மா தமிழ் தம்பதிக்கு நான்காவது மகனாக பிறந்தவர் தன்ராஜ் பிள்ளை. இவருடைய வீட்டில் ஏழ்மை நிறைந்து இருந்த சூழலில் இவருக்கு பெற்றோர் தன்ராஜ் என்ற செல்வம் பெருகும் பெயரை வைத்தனர். அவர்கள் அப்படி வைத்ததனாலோ என்னவோ தெரியவில்லை அவரால் அவருடைய குடும்பத்திற்கு செல்வம் பெருகியது. தன்னுடைய அண்ணன் ரமேஷை பார்த்து ஹாக்கி விளையாட்டில் தன்ராஜ் பிள்ளை களமிறங்கினார்.
தன்னுடைய தந்தை ராணுவத்தின் ஆயுத தொழிற்சாலையில் ஒரு சிறிய வேலையில் இருந்ததால் இவரால் ஹாக்கி மட்டை வாங்க முடியவில்லை. இதன் காரணமாக பழுது அடைந்த பழைய ஹாக்கி மட்டையை வைத்து பயிற்சி செய்துள்ளார். அவ்வப்போது தன்னுடைய நண்பர்களிடம் இருந்து ஹாக்கி ஸ்டிக்கை பெற்று பயிற்சியும் செய்துள்ளார். தன்னுடைய 17ஆவது வயதில் முதல் முறையாக ஜூனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் தன்ராஜ் பிள்ளை கலந்து கொண்டார். மணிப்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் அவர் தனது சிறப்பான ஹாக்கி வித்தையை காண்பித்தார்.
ஹாக்கி வீரர்:
இளம் தன்ராஜ் பிள்ளை அப்போது 100 மீட்டர் தூரத்தை 11.6 விநாடிகளில் ஓடி கடப்பார் என்று கூறப்பட்டது. இதனால் ஹாக்கி மைதானத்தில் இவரின் வேகம் பலரையும் ஈரத்தது. குறிப்பாக அப்போதைய இந்திய ஹாக்கி அணியின் வீரர் ஜோக்கிம் கார்வால்ஹோ இவருடைய திறமையை பார்த்தும் பெரிதும் வியந்தார். தன்ராஜ் பிள்ளையை அழைத்து மகேந்திர கிளப் ஹாக்கி அணிக்கு விளையாடமாறு கூறினார். அது தான் தன்ராஜ் பிள்ளையின் ஹாக்கி வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
ஏனென்றால் அங்கு சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஹாக்கி வீரர்கள் மார்சேலஸ் கோம்ஸ், மார்க் பேட்டர்சன் ஆகியோருடன் விளையாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அவர்களின் அனுபவத்தை பெற்று தன்னுடைய ஹாக்கி விளையாட்டை மேலும் பட்டை தீட்டிக் கொண்டார். இதன்பின்னர் 1989ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் முதல் முறையாக இந்திய அணிக்காக தன்ராஜ் பிள்ளை களமிறங்கினார்.
சர்வதேச சாதனைகள்:
அப்போது முதல் தன்னுடைய ஹாக்கி வித்தையால் பல இந்திய ரசிகர்கள் மட்டும் உலக ரசிகர்களை கட்டிப்போட்டார். குறிப்பாக 1998ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளில் தன்ராஜ் பிள்ளை தலைமையிலான இந்திய அணி பங்கேற்றது. இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. அந்த ஆசிய போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை தன்ராஜ் பிள்ளை பெற்றார். அத்துடன் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். அதற்கு முன்பாக 1966ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளில் இந்திய அணி தங்கம் வென்றது. இவை தவிர 2002ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பட்டத்தையும் இவர் பெற்றார்.
மேலும் இந்தியா சார்பில் 4 ஒலிம்பிக் (1992, 1996, 2000 and 2004), 4 உலகக் கோப்பை (1990, 1994, 1998 and 2002), 4 சாம்பியன்ஸ் கோப்பை( 1995, 1996, 2002,2003), 4 ஆசிய போட்டிகள்(1990, 1994, 1998 and 2002) ஆகியவற்றில் விளையாடிய ஒரே வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 2004ஆம் ஆண்டு உடன் தன்னுடைய ஹாக்கி வீரர் பயணத்தை தன்ராஜ் பிள்ளை முடித்து கொண்டார். 4 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இருந்தாலும் அவற்றில் ஒன்றில் கூட பதக்கம் வெல்ல முடியவில்லை என்பதை அவருடைய ஹாக்கி வாழ்க்கையில் மிகப்பெரும் வருத்தமாக பார்த்தார். எனினும் அது தவிர அவர் ஒரு சிறப்பான ஹாக்கி வாழ்க்கையை தன் வசம் வைத்திருந்தார். 2000ஆம் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்ற முதல் இந்திய ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை தான். மேலும் அதே ஆண்டில் இவருக்கு பத்மஶ்ரீ விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் படிக்க:7 நாட்களில் டோக்கியோ ஒலிம்பிக்: 40 ஆண்டுகால பதக்க கனவை வெல்லுமா இந்தியா ஹாக்கி அணிகள்?