சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ஐசிசி) நடத்தும் மேலும் ஒரு தொடரில் இந்திய அணி தோல்வியுற்று இருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


ரசிகர்கள் ஏமாற்றம்:


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதனால், இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாகவே ஐசிசி தொடர்களில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது, இந்திய ரசிகர்களிடையே கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்திய வீரர்கள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளனர்.


நாக்-அவுட் சுற்றில் சொதப்பும் இந்தியா:


கடைசியாக தோனி தலைமையிலிலான இந்திய அணி, கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்று அசத்தியது. அதன்பிறகு தற்போது முடிந்த டெஸ்ட் சாம்பியன்ஸிப் தொடர் உள்ளிட்ட 9 தொடர்களை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் நடத்தியுள்ளது. இதில் பெரும்பாலான தொடர்களில் நாக்-அவுட் சுற்று மற்றும் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. இருப்பினும் ஒரு கோப்பையை கூட இந்திய அணி வென்றதில்லை.


10 வருடங்களும்.. 9 ஐசிசி தொடர்களும்..


1. தோனி தலைமை..


2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு, 2016ம் ஆண்டு வரை நடைபெற்ற ஐசிசி தொடர்களுக்கும் தோனியே தலைமை தாங்கினார்.  2014ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இலங்கை அணியிடம் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி கண்டது. தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணியிடம் அரையிறுதியிலும்,  2016ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் அரையிறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணியிடமும் இந்திய அணி தோல்வியுற்றது. 


2. கோலி தலைமை:


அதைதொடர்ந்து நடைபெற்ற 4 ஐசிசி தொடர்களுக்கு இந்திய அணிக்கு கோலி தலைமை தாங்கினார்.  ஆனால், 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானிடம் இறுதிப்போட்டியிலும், 2019 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியிடம் அரையிறுதியிலும் இந்திய அணி தோல்வியுற்றது. அதேபோல் 2021ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியுற்ற இந்திய அணி, 2021 டி20 உலகக்கோப்பையில் குரூப் சுற்றிலேயே வெளியேறியது.


3. ரோகித் தலைமை:


இதையடுத்து 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியிடம் அரையிறுதியிலும், தற்போது நடந்து முடிந்த டெஸ்ட் சாம்பியன்ஸிப் தொடரில் ஆஸ்திரேலிய அணியிடமும்,  ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியுற்றுள்ளது. மேற்குறிப்பிட்ட பெரும்பாலான தொடர்களில் இந்திய அணி லீக் சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், நாக்-அவுட் போட்டிகளில் சொதப்பியே கோப்பையை நழுவவிட்டுள்ளது. அதேநேரம் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணி தோல்வியடைந்த அனைத்து ஐசிசி தொடரிலும், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடியது குறிப்பிடத்தக்கது.


தோனி செய்த மேஜிக்:


ஐசிசி தொடர்களில் தோனி இதுவரை 4 முறை இறுதிப்போட்டிகளில் விளையாடி, ஒருநாள் உலகக்கோப்பை, டி-20 கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய கோப்பைகளை கைப்பற்றியுள்ளார். ஒரே ஒரு டி-20 உலகக்கோப்பையில் மட்டுமே இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியுற்றுள்ளார். அதேநேரம், தோனி இல்லாமல் 7 இந்திய கேப்டன்கள் ஐசிசி தொடரின் இறுதிபோட்டிக்கு அணியை வழிநடத்தியுள்ளனர். அதில், கபில்தேவ் மட்டுமே 1983ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை கைப்பற்றினார். மற்ற 6 ஐசிசி இறுதிபோட்டிகளிலும் இந்திய அணி தோல்வியையே தழுவியுள்ளது.