உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில், பேட்டிங் அதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இந்தியா தோல்வி:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை, 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே ஐசிசி தொடர்களின் நாக் -அவுட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய அணி இந்த முறையும் அதே பிரச்னையில் சிக்கியது.
பந்துவீச்சை தேர்வு செய்தது தவறா?
லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தினாலும், முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் பந்துவீச்சை கண்ட பிறகு ரோகித்தின் முடிவு சரியாகவே தோன்றியது. புல் அதிகமாக இருந்த அந்த மைதானத்தில், ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசி இருந்தால், அவர்களின் வேகப்பந்துவீச்சை இந்திய அணி திறம்பட சமாளித்து இருக்குமா? என்பது சந்தேகமே.
ஆதிக்கம் செலுத்திய பார்ட்னர்ஷிப்..!
இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் கூட, இந்திய அணி பந்துவீச்சாளர்கள் ஓரளவிற்கு சிறப்பாகவே செயல்பட்டனர். இரண்டாவது இன்னிங்ஸிலும் கூட சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆனால், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டடத்தில் வெறும் 76 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்திய அணி நெருக்கடி கொடுக்க தவறியது. இதனால், 4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஸ்மித் - டிராவிஸ் ஹெட் கூட்டணி 285 ரன்களை குவித்தது. ஒருவேளை இந்த கூட்டணியை முன்கூட்டியே பிரித்து இருந்தால், ஆஸ்திரேலிய அணியை முதல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்கு உள்ளாகவே சுருட்டி இருக்கலாம்.
சொதப்பும் பேட்டிங்:
இந்திய அணியின் தோல்விக்கு டாஸ் மற்றும் பந்துவீச்சை காட்டிலும், பேட்டிங் தான் மிகப்பெரும் காரணமாக அமைந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஓரளவுக்கு தாக்குப்பிடித்து இருந்தாலே, இரண்டாவது இன்னிங்ஸில் 444 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்த வேண்டி இருந்து இருக்காது. கேப்டன் ரோகித் சர்மா, கில், கோலி மற்றும் புஜாரா என அனைத்து வீரர்களும் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து கூட, தலா 100 ரன்களை சேர்க்கவில்லை. விக்கெட் கீப்பர் பரத் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய இன்னிங்ஸை ஆடவில்லை.
ரோகித், கோலிக்கு என்ன ஆச்சு?
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறினார். இரண்டு இன்னிங்ஸ்களில் விளையாடி ஒரு அரைசத்தை கூட அவர்கள் அடிக்கவில்லை. குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் கோலி சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 49 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ரோகித் சர்மாவும் வெறும் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரரான கில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து, மொத்தமாகவே 31 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.
புஜாரா ஏமாற்றம்:
டாப்-ஆர்டரில் விளையாடிய மற்ற வீரர்கள் அனைவருமே ஐபிஎல் தொடரில் விளையாடி விட்டு, வெறும் ஒருவார இடைவெளியில் இங்கிலாந்திற்கு வந்தனர். ஆனால், புஜாரா ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இங்கிலாந்து வந்து, கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வந்தார். இதனால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தமாகவே வெறும் 41 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார்.
காயம் செய்த கோலம்:
மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் தாண்டி ரிஷப் பண்ட், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகிய நட்சத்திர வீரர்கள், காயம் காரணமாக இறுதிப்போட்டியில் விளையாடாததும் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.