இங்கிலாந்து எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 


தட்டித் தூக்கிய தவண்; அதிரடி காட்டிய ராகுல்


புனேவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பில்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக ரோஹித் ஷர்மாவும் ஷிகர் தவணும் களமிறங்கினர். கொஞ்சம் கொஞ்சமாக ரன் வேகத்தை கூட்டிய ரோஹித் விக்கெட்டை ஸ்டோக்ஸ் கைப்பற்றினார். தவணுடன் இணைந்த விராட் கோலி சீராக விளையாடி அணியின் ரன் வேகத்தை கூட்டினார். அரை சதம் எடுத்த நிலையில் மார்க் வுட் பந்தில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் அபாரமாக விளையாடிய தவண், 98 ரன்னில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர், பாண்டியா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அணியை மீட்டெடுத்த  கே.எல்.ராகுல் அரைசதம் அடித்தார். அறிமுக வீரர் குருணால் பாண்டியா அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.


ஆரம்பத்தில் சரவெடி...போகப்போக புஷ்வானம்


318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட இங்கிலாந்துக்கு, துவக்க வீரர்கள் ராய், பேர்ஸ்டோ ஜோடி அதிரடி துவக்கம் கொடுத்தது. முதல் சில ஓவர்களில் ரன்களை வாரி இறைத்து புதுமுக வீரர் பிரசீத் கிருஷ்ணா, ராயின் விக்கெட்டை கைப்பற்றினார். பின்னர் வந்த வீரர்கள் தொடர்ந்து ஒவ்வொருவராக ஆட்டம் இழக்க, இங்கிலாந்து அணி தத்தளித்தது. ஷர்துல் தாக்கூர் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தார்.




மறுபுறம் பிரசீத் கிருஷ்ணாவும் தன் பங்குக்கு ஸ்டோக்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். முடிவாக 42 ஓவர்களிலே அந்த அணி 251 ரன்களுக்கு ஆட்டமிழந்து படுதோல்வி அடைந்தது. இந்திய அணித் தரப்பில் பிரசீத் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளும் தாக்கூர் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர். நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் களமிறங்கிய புவனேஷ்வர் குமார், சிக்கனமாக  பந்துவீசி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதிரடியாக தொடக்கம் கொடுத்து வெற்றிக்கு வழிவகுத்த ஷிகர் தவண் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.