கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டின் இரண்டாவது டோஸ் போடும் காலத்தைக் 6-8 வாரங்களாக நீட்டிக்கச் சொல்லி மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. நோய்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு மற்றும் கோவிட்-19 தடுப்பூசிக்கான தேசிய நிபுணர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த நிபுணர்கள் குழுவின் 20வது சந்திப்பில் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் போடும் கால அட்டவணை திருத்தப்பட்டுள்ளது.




கொரோனா நோய்த்தடுப்புக்காகப் போடப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இரண்டு தவணைகளாகச் செலுத்தப்படுபவை. இதுவரை முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்குமிடையே  4-6 வார கால இடைவெளி இருந்து வந்தது. ஆனால் இந்தக் கால இடைவெளியை அதிகரிப்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனச் சொல்லப்பட்டதால் தற்போது மத்திய அரசு இந்த இடைவெளியை 4-8 வாரகாலமாக அதிகரித்துள்ளது.


இடைவெளியை அதிகரிப்பது எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்குமா? உண்மை என்ன? பொதுநல மருத்துவரும் தமிழ்நாடு சுகாதார முன்னேற்றக் கூட்டமைப்பின் தலைவருமான ரெக்ஸ் சற்குணம் இதுபற்றி விவரிக்கிறார்.


“முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்கும் பெரிதாக வித்தியாசம் கிடையாது இரண்டு மருந்துகளில் இருப்பதும் ஒரே கெமிக்கல்தான். ஆனால்  நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள் மற்றும் ஆன்டிபாடிகளுடன் இணைந்து இந்த இரண்டு மருந்துகளும் வெவ்வேறு வகையாகச் செயல்படுகின்றன. நோய் எதிர்ப்பு செல்கள் உடலில் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட செல்களை அழிக்கும். ஆன்டிபாடிக்கள் வெளியிலிருந்து அண்டும் வைரஸ்களை எதிர்கொள்ளும். இந்த  கொரோனா வைரஸ்களை ஆன்டிபாடிக்கள் நீண்ட நாட்கள் நமது உடலில் செயல்பட வேண்டும் என்பதற்காகதான் ஊசி போடும் இடைவெளியையும் அதிகரித்திருக்கிறார்கள்” என்றார்.


இந்த இடைவெளி கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்கு மட்டும்தானே ஒழிய கோவாக்சின் வகைத்தடுப்பூசிகளுக்கு இல்லை என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.