ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற மகளிர் ஹாக்கி அணி சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதிப் போட்டி வரை முன்னேறினர். மேலும், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியிலும் பிரிட்டன் அணிக்கு எதிராக இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் சிறப்பாக ஆடினர்.


தகுதிச்சுற்றுடனே வெளியேறிவிடும் என்று விமர்சிக்கப்பட்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிப் போட்டி வரை சென்றது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. மேலும், மகளிர் ஹாக்கியில் ஜாம்பவனாக திகழும் ஆஸ்திரேலியாவை காலிறுதியில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தோற்கடித்ததும், குறிப்பாக அந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் 7 பெனால்டி வாய்ப்புகளையும் தடுத்ததும் இந்திய மகளிர் ஹாக்கியை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.





இந்திய மகளிர் ஹாக்கி அணியின் இத்தகைய அசுர வளர்ச்சிக்கு காரணமாக திகழ்ந்தவர், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பயிற்சியாளர் சூர்ட் மார்ஜனே. இந்த நிலையில், அவர் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறியிருப்பதாவது,


“ இந்திய மகளிர் ஹாக்கி அணியினருடன் இதுவே எனது கடைசி ஆட்டம். எனக்கு வேறு திட்டங்கள் இல்லை. இனிமேல் ஜன்னேகாதான் ( அனலிடிகல் பயிற்சியாளர்) அணியை கவனித்துக்கொள்ள வேண்டும். என்னுடன் பயிற்சி எடுத்துக்கொண்ட மகளிரணியினரை மிகவும் மிஸ் செய்வேன். அதைவிட எனது குடும்பத்தினர் எனக்கு மிகவும் முக்கியம். மூன்றரை வருடங்கள் வெளியிலேயே இருந்ததால் எனது மகள், மகன், மனைவியுடன் இருக்க விரும்புகிறேன். இந்தப் பயணத்தை இந்த அழகான முறையில் நிறைவு செய்ய விரும்புகிறேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார். அவரது ராஜினாமா மகளிர் ஹாக்கி அணியினர் மட்டுமின்றி, இந்திய ரசிகர்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.




இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் சூர்ட் மார்ஜனே 1974ம் ஆண்டு ஏப்ரல் 20-ந் தேதி பிறந்தவர். 47 வயதான அவர் நெதர்லாந்து ஹாக்கி அணிக்காக ஆடியவர். பின்னர், 2001ம்  ஆண்டு முதல் அவர் பயிற்சியாளராக செயல்பட்டு வரகிறார். எம்.ஓ.பி., தில்பர்க், ஆம்ஸ்டர்டம், ஆரஞ்ச்சூவார்ட், டென் போஸ்ச் அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். பின்னர், 2013ம் ஆண்டு 21வயதுக்குட்பட்ட நெதர்லாந்து அணிக்கும், 2014-15ம் ஆண்டில் நெதர்லாந்து மகளிர் ஹாக்கி அணிக்கும் பயிற்சியாளராக பணியாற்றினார். பின்னர், 2017ம் ஆண்டு இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றினார்.


பின்னர், 2017-2018ம் ஆண்டு வரை இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு பயிற்சியாளராக பணிபுரிந்தார். பின்னர், மீண்டும் மகளிர் ஹாக்கி அணிக்கு திரும்பிய அவர் 2018ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணியை மற்ற அணிகள் பெரிய பொருட்டாக கருதவில்லை என்பதே உண்மை. ஆனால், அரையிறுதிக்கு இந்திய அணியினர் முன்னேறியபோது முன்னணி அணிகள் அனைத்தும் இந்திய அணியை கண்டு வியந்தனர் என்பதே உண்மை.




மார்ஜனே பயிற்சியின் கீழ் தொடக்க போட்டிகளில் நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய அணிகளிடம் இந்திய அணி தோற்றாலும், பின்னர், மார்ஜனே அளித்த பயிற்சி மற்றும் ஊக்கத்தால் அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி வரலாற்றில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதி வரை முன்னேறி மகத்தான சாதனை படைத்தது.