தமிழகத்தில் உள்ள அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், பயிற்சிப் பள்ளிகளில் படித்துத் தேர்ச்சி அடையாத தனித்தேர்வர்கள் தேர்வு எழுத வசதியாக செப்டம்பர் 2ம் தேதி முதல் தேர்வு நடத்த அரசுத் தேர்வுகள் துறை திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, தனித்தேர்வர்கள் இன்று காலை 11:30 முதல் 11ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கட்டணமாக ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50/-,மதிப்பெண் சான்று (முதலாம் ஆண்டு) ரூ.100/-,  பதிவு மற்றும் சேவைக்கட்டணம் ரூ.15/-, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/- செலுத்த வேண்டும். இன்று முதல் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறினால் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் 12ம் தேதி விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான கட்டணம் ரூ.1000/- செலுத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. 

முன்னதாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு எழுதியவர்கள் நீண்டகாலமாக நியமிக்கப்படாமல் முந்தைய அரசு காலந்தாழ்த்தி வந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் பணிக்கு, தகுதி தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. இதில் முதல் தாள் இடைநிலை ஆசிரியர் தேர்வும், இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெற்று தேர்வில் 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2013ஆம் ஆண்டு நடந்த தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணி வழங்க சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்தது. ஆனால் வெற்றி பெற்றவர்களின் 10, 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை கொண்டு வெயிட்டேஜ் முறையை கொண்டு பணி வழங்கப்படும் என்று தீடீரென அரசு அறிவித்தது. இதனால் 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றவர்களில் சுமார் 6000 பேர், ‘வெயிட்டேஜ்’ என்ற முறை அமல்படுத்தப்பட்டதால் தங்கள் பணி வாய்ப்பை இழந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு, தமிழக அரசு ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் முறை இல்லை என கூறி வெயிட்டேஜ் முறையை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது. இதனையடுத்து வெயிப்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என பட்டதாரிகள் அப்போதய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரை சந்தித்து வலியுறுத்தினர். ஆனால் பணி வழங்குவதாக கூறி, காலம் தாழ்த்தி வந்தனர். இந்நிலையில், சட்டமன்ற பொதுத்தேர்தல் வந்தது. அப்பொழுது திமுக தேர்தல் அறிக்கையில், வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் தகுதிபெற்ற ஆசிரியர்களை பணியிடங்களில் நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.