சீனாவில் நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. 10 மீட்டர் ஏர் ரைபிள் டீம் பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. 1893.7 மதிப்பெண்களுடன் இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. திவ்யான்ஷ் பன்வார், ஐஸ்வரி தோமர், ருத்ரன்காஷ் பாட்டீல் ஆகியோர் தங்கம் வென்று உலக, ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய சாதனைகளை முறியடித்தனர். நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வெல்லும் 7வது பதக்கம் இதுவாகும்.
போட்டி விவரம்:
10 மீட்டர் ஏர் ரைபிள் டீம் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா சார்பில், திவ்யான்ஷ் பன்வார், ஐஸ்வரி தோமர், ருத்ரன்காஷ் பாட்டீல் ஆகியோர் பங்கேற்றனர். இதில் ஒவ்வொரு அணிக்கும் 6 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதன்படி ஒவ்வொரு சுற்றிலும் இந்திய அணி முறையே, 313.7, 315.9, 313.7, 315.9, 318.7 மற்றும் 315.8 ஆகிய புள்ளிகளை பெற்றது. அதிகபட்சமாக 5வது சுற்றில் 318.7 புள்ளிகளும், தனிநபர் அதிகபட்சமாக ருத்ரன்காஷ் பாட்டீல் ஐந்தாவது சுற்றில் 106.7 புள்ளிகளை பெற்றார். 6 வாய்ப்புகளிலும் சேர்த்து ருத்ராங்க்ஷ் பாட்டீல் 632.5 புள்ளிகளையும், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 631.6 புள்ளிகளையும், திவ்யான்ஷ் சிங் பன்வார் 629.6 புள்ளிகளையும் குவித்தனர். இதன் மூலம் ஒட்டு மொத்தமாக 1893.7 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. தென்கொரிய அணி 1890.1 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், 1888.2 புள்ளிகளுடன் சீனா வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றின.
உலக சாதனை முறியடிப்பு:
முன்னதாக, அண்மையில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், சீன அணி 1893.3 புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. தற்போது வரை அது தான் உலக சாதனையாக இருந்தது. இந்நிலையில், சீனாவை விட கூடுதலாக 0.4 புள்ளிகளை பெற்ற இந்திய அணி, 10 மீட்டர் ஏர் ரைபிள் டீம் பிரிவில் புதிய உலக சாதனை படைத்துள்ளது. அதோடு, இதே பிரிவில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஏற்கனவே இருந்த சாதனையையும் இந்தியா தகர்த்துள்ளது. துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் மேலும் சில பதக்கங்களை வெல்லும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.