IND Vs AUS: கிரிக்கெட் உலககில் மிகவும் ஆக்ரோஷமான கிரிக்கெட் விளையாடும் நாடுகள் என்றால் அதில் முதல் வரிசையில் இடம் பிடிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இருக்கும். இரு அணிகளின் போட்டி உலகின் எந்த மைதானத்தில் நடைபெற்றாலும், அது எந்தவகைக் கிரிக்கெட்டாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட அணிகள் போட்டி நடக்கும் நாட்டில் களம் இறங்குவதற்கு முன்பாகவே அந்த நாட்டிற்கு சென்று போட்டி ரசிப்பதற்கு தங்களை தயார் படுத்திக்கொள்ளும் தீவிரமான ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். 


கிரிக்கெட் சர்வதேச அளவில் நடத்த திட்டமிடப்பட்ட காலம் தொடங்கி இன்று வரை மிகவும் சவாலான அணி என்றால் அது ஆஸ்திரேலியாதான். அதிலும் ஆஸ்திரேலிய அணியில் ஒரு வீரருக்கு இடம் கிடைக்கிறது என்றால் அந்த வீரரால் எப்பேர்ப்பட்ட சூழலிலும் போட்டியின் தன்மையை மாற்றிடும் வல்லமை படைத்தவர்களாக இருப்பார்கள். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் உயரமாகவே இருப்பார்கள். உயரமான வீரர்களால் இயல்பாவே பவுன்சர் பந்துகளை வீசமுடியும் என்பதால், இதனை குறிவைத்துதான் அணியிலும் தேர்வு செய்வார்கள். மற்ற நாடுகள் எல்லாம் யார்கர் மன்னகளை தேடிக்கொண்டு இருக்கும்போது ஆஸ்திரேலியா மட்டும் பவுன்சர் சூறாவளிகளைத் தேடிக்கொண்டு இருப்பார்கள். 


இப்படியான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு அணி அதிகபட்சமாக ரன்களைக் குவிக்கிறது என்றால் அதுசாதாரணமான விஷயம் கிடையாது. இந்திய அணி இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இந்திய அணி 55 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி 82 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 10 போட்டிகள் முடிவு எட்டப்படாமல் முடித்துக்கொள்ளப்பட்டது.  இந்திய அணி வெற்றி பெற்ற 55 போட்டிகளில் 38 போட்டிகள் இந்தியாவில் நடந்த போட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்திய அணி கடந்த காலங்களில் அணி கட்டமைப்பில் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு பல படிப்பினைகளைக் கற்றிருந்தாலும், அதன் மூலம் இந்தியா தனது கிரிக்கெட் ஆடும் தரத்தினை மேம்மடுத்தி தற்போது உலகின் சவாலான அணிகளில்ம் ஒன்றாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளின் ஐசிசி தரவரிசைப்படி முதல் இடத்தில் உள்ளது. 


இந்நிலையில் இந்திய அணி இன்று அதாவது செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி இந்தூரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்கள் சேர்த்தது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் மற்றும் இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் என இருவரும் சதம் விளாசினர்.


399 ரன்கள் என்பது இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டி வரிசையில் எடுக்கப்பட்ட அதிக பட்ச ஸ்கோராக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2013ஆம் ஆண்டு பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட்டுகளை இழந்து 383 ரன்கள் சேர்த்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. 


இன்று நடைபெற்ற போட்டியில் அஸ்வின் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 144 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.