இந்தியா - இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி, இந்த தொடரை வெல்லப்போவது யார் என முடிவு செய்யப்போகும் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான், பேட்டிங் தேர்வு செய்தார். கடைசி ஐந்து டி-20 தொடர்களை தொடர்ந்து இழந்திருந்த இலங்கை அணி, ஒரு வழியாக இந்த தொடரை கைப்பற்றி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 81 ரன்கள் எடுத்தது. சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில், மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது இந்திய அணி.  எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு, அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் மினோத் பனுகா ஆகியோர் ஓப்பனிங் களமிறங்கினர்.


23 ரன்கள் வரை விக்கெட் எதுவும் விழாமல் இருந்த நிலையில், ராகுல் சஹார் இந்திய அணிக்கு முதல் விக்கெட்டை பெற்றுத் தந்தார். அதனை தொடர்ந்து, இந்த இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளையும் ராகுல் சஹார் மட்டுமே எடுத்தார். இந்திய அணியின் மற்ற பெளலர்களால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. 3 விக்கெட்டுகளை இழந்தபோதும், எளிதான ஸ்கோர் என்பதால், 14.3 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி இலங்கை அணி போட்டியை வென்றது. மூன்று போட்டிகளில், இரண்டு டி-20 போட்டிகளை வென்ற இலங்கை அணி, தொடரையும் கைப்பற்றி அசத்தியது.






முன்னதாக, முதல் இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தவான், ரூத்துராஜ் சொதப்பலாக ஆடினர். வந்த வேகத்தில், கோல்டன் டக்-அவுட்டாகி தவான் பெவிலியன் திரும்ப, அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் அவுட்டாகினர். 


தவான், ரூத்துராஜ் ஆகியோரைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, படிக்கல் என பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்காமல் சொதப்பினர். இதனால், மடமடவென சரிந்த டாப்-ஆர்டரால் அடுத்து களமிறங்கிய மிடில் மற்றும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பேட்டிங் செய்து ரன் எடுப்பது சவாலாக இருந்தது.






இலங்கை அணி பெளலர்களை பொருத்தவரை, ஹசராங்கா 4 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார். கடந்த  போட்டியில் செய்த தவறுகளை திருத்திக் கொண்ட இலங்கை அணி, இந்த போட்டியில் பர்ஃபெக்டான கேட்சுகள், பொறுப்பான ஃபீல்டிங் ஆகியவற்றை முதல் இன்னிங்ஸில் அசத்தினர். இதனால், 20 ஓவர்களை முழுமையாக ஆடுமா என்ற சந்தேகத்தில் இந்திய அணி திணறியது. இறுதியில், தாக்குப்பிடித்து நின்ற இந்திய அணி, 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 81 ரன்கள் மட்டுமே எடுத்தது. 



எளிதான இலக்கை நோக்கி களமிறங்கும் இலங்கை அணியை, இந்திய அணியின் பெளலிங் சுருட்டுமா என்பது அடுத்த இன்னிங்ஸில். ஆனால், இலங்கை அணி இந்தியாவிற்கு எதிராக விளையாடிய கடந்த 11 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2021ம் ஆண்டு இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய டி20 போட்டியில் 3-0 என்ற கணக்கிலும், மேற்கிந்தீய தீவுகளுக்கு எதிராக ஆடிய போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் தோல்வியடைந்தது. இந்நிலையில், போட்டியை வென்று தொடரைப் கைப்பற்றும் முனைப்பில் இலங்கை அணி விளையாடும் என்பது தெரிகிறது.