இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்திய அணிக்கு அனுபவ வீரர் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணிக்கு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளையும் வென்ற இந்திய அணி, தொடரை கைப்பற்றி மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இப்போது விளையாடி வருகிறது. சொந்த மண்ணில் விளையாடி வரும் இலங்கை அணி, ஆறுதல் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியைச் சேர்ந்த ஐந்து இளம் வீரர்களாக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுக வீரர்களாக களமிறங்கியுள்ளனர். சஞ்சு சாம்சன், நிதிஷ் ரானா, ராகுல் சஹர், சேத்தன் சகாரியா மற்றும் கிருஷ்ணப்பா கெளதம் ஆகிய ஐந்து வீரர்கள் ஒரே நேரத்தில் அறிமுகமாகியுள்ளனர்.
1980-ம் ஆண்டிற்கு பிறகு இப்போதுதான் இந்திய அணியில், ஒரே நேரத்தில் ஐந்து கிரிக்கெட்டர்கள் இந்திய அணிக்காக அறிமுக வீரர்களாக களமிறங்கி உள்ளனர். இந்த ஐந்து வீரர்கள் பற்றிய சிறிய குறிப்பு இதோ!
சஞ்சு சாம்சன்
2014-ம் ஆண்டு சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அறிமுகமான சஞ்சு சாம்சன், ஒரு நாள் கிரிக்கெட்டில் தடம் பதிக்க கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக காத்திருந்தார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு, இன்று அந்த கனவு நனவானது. ஐபிஎல் தொடரைப் பொருத்தவரை, ராஜஸ்தான் அணிக்காக அவர் சில சரவெடி இன்னிங்களை விளையாடியுள்ளார். 2014-ம் ஆண்டு ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ராகுல் டிராவின் இருந்தபோது, சஞ்சு சாம்சன் தனது கிரிக்கெட்டிங்கை மெருகேற்றிக் கொண்டார். இந்நிலையில், இப்போது மீண்டும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் கீழ் சஞ்சு தனது அறிமுக போட்டியில் களமிறங்கியுள்ளார்.
நிதிஷ் ராணா
டெல்லியைச் சேர்ந்த நிதிஷ் ராணா, 2015-16 நடைபெற்ற சையத் முஸ்தாக் அலி கோப்பையில், 299 ரன்கள் எடுத்து டெல்லி அணியை அரை இறுதிக்கு அழைத்துச் சென்றார். அதனை தொடர்ந்து, மும்பை இந்தியன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள அவர், இப்போது ஒரு நாள் போட்டியில் அறிமுகமாகி உள்ளார். அதிரடி ஷாட்களுக்கு பெயர்போன ராணா, இந்த ரன்கள் விளாசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் சஹார்
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடிய ராகுல் சஹார், இப்போது சீனியர் அணியிலும் இடம் பிடித்திருக்கிறார். 21 வயதேயான இளம் பெளலர் இவர். 2019-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான போட்டியில் அறிமுகமான ராகுல், இரண்டு ஆண்டுகளில் ஒரு நாள் கிரிக்கெட்டிலும் தனது தடத்தை பதிவு செய்துள்ளார்.
சேத்தன் சகாரியா
23 வயதேயான இளம் பெளலர், சேத்தன் சகாரியா. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் சேத்தன் சகாரியா, ஒரு நாள் தொடரில் விளையாடுகிறார்.
கிருஷ்ணப்பா கெளதம்
இன்று அறிமுகமான வீரர்களிலேயே சீனியர் வீரர் இவர்தான். பெளலிங் ஆல்-ரவுண்டரான கிருஷ்ணப்பா கெளதம், சர்வதேச கிரிக்கெட்டில் தனது 32 வயதில் அறிமுகமாகியுள்ளார். ஐபிஎல் தொடரைப் பொருத்தவரை, மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய அவர், கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.