பெகசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி தனது தொலைபேசி வேவு பார்க்கப்பட்டதாக  வெளியான செய்திகளை அடுத்து, பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது தொலைபேசியை மாற்றியுள்ளார். The Pegasus Project என்ற கூட்டமைப்பு, இஸ்ரேல் நாட்டு பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள பெகசஸ் ஸ்பைவேர் மூலம் உளவு பார்க்கப்படுவது தொடர்பான சர்வதேச விசாரணையை கடந்த பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்தாண்டு Forbidden Stories என்ற இணையதளத்தில் பெகசஸ் ஸ்பைவேர் மூலம் வேவு பார்க்கப்பட்டிருக்லாம்  என்று கருதக்கூடிய, 50,000 தொலைபேசி எண்களுடன் கூடிய தரவுதளம் வெளியானது. இந்த தொலைப்பேசி எண்களுடன் தொடர்புடைய நபர்கள் உளவு பார்க்கப்படுகிறார்கள் என்ற செய்தியை கடந்த ஜூலை 18ம் தேதி ஊடகங்கள் தெரிவித்தன. 


புகழ்பெற்ற வழக்கறிஞர்கள், ஊடகங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் பலதரப்பட்டவர்களின் தொலைபேசி எண்களும் இந்த உளவுச் செயலியால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டது. இந்நிலையில், உலகளவில் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 




பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன்,  இராக் அதிபர் பர்ஹம் சாலிஹ், தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோசா,  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எகிப்து பிரதமர் முஸ்தபா மட்பெளலி, மொராக்கோ பிரதமர் ராகியா எட்டர்ஹாம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வேவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மொரோக்கோ நாட்டு உளவுத் துறை அமைப்புகள் பிரான்ஸ் நாட்டு அதிபரை உளவுபார்த்தாக செய்திகள் தெரிவிக்கினறன.        


விசாரணை தீவிரம்:  இந்நிலையில், பெகசஸ் ஸ்பைவேர் தொடர்பான விசாரணைக்கு இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆணையம் விசாரணைக் குழு ஒன்றை நியமித்துள்ளது. ஸ்பைவேர் மூலம்  ஊடகவியலாளர்கள் உளவு பார்க்கப்பட்டது தொடர்பாக பிரான்ஸ் அரசும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. தங்களின் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக தெரிவித்த மொரோக்கோ அரசு, பெகசஸ் லீக் குறித்து விசாரிக்க இருப்பதாக தெரிவித்தது.




விசாரிக்க இந்தியா மறுப்பு: இந்தியாவில் உச்சநீதிமன்ற நீதிபதி, தற்போது ஒன்றிய அமைச்சர்களாக இருப்பவர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர், புகழ்பெற்ற வழக்கறிஞர்கள், ஊடகங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என 300க்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களும் இந்த உளவுச் செயலியால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. 


இந்நிலையில் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் போன் ஒட்டு கேட்பு புகாருக்கு ஆதாரம் இல்லை என மத்திய அரசு இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. நேற்று, மாநிலங்களவையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்த அறிக்கையில், "பட்டியலில் உள்ள எண்கள் வேவு பார்க்கப்பட்டனவா என்பது கூற இயலாது என்று செய்தியை வெளியிட்டவர் கூறுகிறார். வேவு பார்க்க பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் தொழில்நுட்பத்தின் உரிமையாளர் நிறுவனம் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளது.  சட்டப்பூர்வமில்லா வேவுபார்த்தல் நடைபெறாமல் இருப்பதை நமது நாட்டின் நன்கு நிறுவப்பட்ட செயல்முறைகள் உறுதி செய்கின்றன" என்று தெரிவிக்கப்பட்டது.   


மேலும் வாசிக்க: 


Pegasus | துபாய் இளவரசி லத்தீஃபாவை சிறைவைக்க உதவியதா பெகசஸ் செயலி?


பெகசஸ் மூலம் அரசால் உளவு பார்க்கப்பட்டதா? நடந்திருந்தால் இவ்வளவு கோடிகள் செலவு செய்திருப்பார்கள் - நிபுணர்கள் தகவல்..!