இந்திய அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியுடனான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான முதல் டி20 போட்டி இன்று அந்த நாட்டின் கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தஸீன் ஷனகா பவுலிங்கை தேர்வு செய்தார். தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி அணியில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், ப்ரித்வி ஷா ஆகியோர் களமிறங்கினார்கள். ப்ரித்வி ஷா முதல் பந்திலேயே அவுட் ஆகி அதிர்ச்சியை கொடுத்தார். அதன்பிறகு சஞ்சு சாம்சன் களமிறங்கினார். தொடக்க முதலே அதிரடியாக சாம்சன், 20 பந்துகளில் 27 ரன்கள் அடித்து ஹசரன்கா பந்துவீச்சில் வெளியேறினார். அப்போது, 6 ஓவர்களின் இந்திய அணி 50 ரன்களை கடந்து விட்டது. அடுத்து களமிறங்கிய சூர்யாகுமார் யாதவ், தவான் சீரான இடைவெளியில் விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த கூட்டணி 50 ரன்கள் சேர்த்த நிலையில், இந்தியா 12 ஓவர்களின் 100 ரன்களை தொட்டது. 15.1 ஓவர்களில் தவான் வெளியேற, அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவும் விக்கெட்டை இழந்தார்.
இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆட முயற்சித்தும், கடைசி நேரத்தில் இலங்கை பவுலர்கள் நன்றாக பந்துவீசியதால், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து, இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 165 ரன்களை நிர்ணயித்துள்ளது.
இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 50, ஷிகர் தவான் 46, சஞ்சு சாம்சன் 27 ரன்கள் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் ஷமீரா, ஷசரங்கா தலா இரண்டு விக்கெட்டுகளையும், கருணரத்னே ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து, களமிறங்கிய இலங்கை அணி மூன்று ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து 25 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.