இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. தென்னாப்பிரிக்காவில் தற்போது ஓமிக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ளதால் இந்தத் தொடருக்கு மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஆகவே இந்த முறை எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைபைப்பில் இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நாளை தொடங்கும் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டி என்று அழைக்கப்படுகிறது. அப்படி அழைக்கப்படுவதற்கான காரணம்? பாக்சிங் டே டெஸ்டில் இதுவரை இந்தியாவின் செயல்பாடுகள் என்னென்ன?
பாக்சிங் டெஸ்ட் என்றால் என்ன? அந்த பெயர் வர காரணம் என்ன?
உலகம் முழுவதும் அதிக நபர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையும் ஒன்று. இந்தப் பண்டிகை டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே ஒருவருக்கொருவர் அன்பை பரிசுகள் மூலம் பரிமாறி கொள்வார்கள். அதற்கேற்ப இங்கிலாந்தில் பல ஆண்டுகளுக்கு முன்பாக கிறிஸ்துமஸ் தினத்தன்று சிறிய பெட்டிகள் (பாக்ஸ்) வைக்கப்படுவது வழக்கம். அதில் ஊழியர்கள் மற்றும் சில ஏழைகளுக்கு மக்களுக்கு சிலர் பரிசை போடுவார்கள். இந்த பாக்ஸை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாளான டிசம்பர் 26ஆம் தேதி திறந்து பரிசை எடுத்து தருவார்கள். அந்த பாக்ஸை திறக்கும் நாளன்று தொடங்கும் விளையாட்டு போட்டிகள் பாக்சிங் டே விளையாட்டு போட்டிகள் என்று அழைக்கப்படும்.
பாக்சிங் டே டெஸ்ட்:
இந்த பாக்சிங் டே நாளில் முதன் முதலில் 1856ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் அணி உள்ளூர் போட்டியில் பங்கேற்றது. இந்தப் போட்டி மிகவும் பிரபலம் அடைந்தது. அதன்பின்னர் 1865ஆம் ஆண்டு முதல் இதை ஒவ்வொரு ஆண்டும் விளையாட நியூ சவுத் வேல்ஸ் அணி முடிவு செய்தது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பாக்சிங் டேவில் அந்த அணி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றது.
1950ஆம் ஆண்டு முதல் சர்வதேச பாக்சிங் டே டெஸ்ட் நடைபெற்றது. முதல் பாக்சிங்டே டெஸ்டில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மெல்பேர்னில் மோதின. அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் பாக்சிங் டே டெஸ்ட் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. 1980ஆம் ஆண்டு முதல் அந்தப் போட்டி மெல்பேர்னில் நடைபெற தொடங்கியது. ஆஸ்திரேலியாவை போல் தென்னாப்பிரிக்காவிலும் 1992ஆம் ஆண்டு முதல் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
பாக்சிங் டே டெஸ்டில் இந்திய அணி:
இந்திய கிரிக்கெட் அணி 1985ஆம் ஆண்டு முதல் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. மெல்பேர்னில் நடைபெற்ற அந்தப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடியது. அதேபோல் தென்னாப்பிரிக்காவிலும் இந்திய அணி தன்னுடைய முதல் பாக்சிங் டே டெஸ்டை 1992ஆம் ஆண்டு முதல் முறையாக விளையாடியது. அந்தப் போட்டியில் ஆலென் டொனால்ட் 12 விக்கெட் வீழ்த்தியதால் இந்திய அணி தோல்வி அடைந்தது.
பாக்சிங் டே டெஸ்டில் இந்தியா:
இந்தியா vs | போட்டிகள் | இந்தியா தோல்வி | இந்திய வெற்றி | டிரா |
ஆஸ்திரேலியா |
8 | 4 | 2 | 2 |
தென்னாப்பிரிக்கா |
5 | 4 | 1 | 0 |
தென்னாப்பிரிக்காவில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பாக்சிங்டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு பின் கடைசியாக 2013ஆம் ஆண்டு டர்பனில் நடைபெற்ற பாக்சிங் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு பின்பு தற்போது நாளை தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:''பல கட்சிகள் கூப்பிடுறாங்க.. ஆனா என் முடிவு இதுதான்..'' - மனம் திறந்த ஹர்பஜன்!!