ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 தொடர் ஆகஸ்ட் மூன்றாம் தேதி அதாவது நேற்று மிகச்சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. . இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டிருந்தது. மொத்தம் 20 போட்டிகள் கொண்ட இந்த தொடர் சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் தொடரில், கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா, இந்தியா என மொத்தம் 6 நாடுகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கிய தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதி முடிவடையவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிய ஹாக்கி கூட்டமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது. 


போட்டியின் இரண்டாவது நாளான இன்று மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சவுத் கொரியாவும் மூன்று முறை கோப்பையை தட்டித் தூக்கி, 5 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மிகவும் அனுபவம் வாய்ந்த அணியுமான பாகிஸ்தான் அணியும் மோதிகொண்டன. இதில் சவுத் கொரியா அணி தனது முதல் போட்டியில் ஜப்பான் அணியை வீழ்த்தி நம்பிக்கையுடனும், பாகிஸ்தான் அணி மலேசியா அணியிடம் தோல்வி பெற்று வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. இந்த போட்டியில் இரு அணியும் தலா ஒரு கோல் போட, போட்டி டிராவில் முடிந்தது. 


அதன் பின்னர் நடைபெற்ற சீனா மலேசியா அணிகளுக்கு இடையிலான போட்டியில், ரசிகர்களுக்கு தரமான விருந்து காத்திருந்தது. முதல் சுற்றில் இருந்தே மலேசியா அணி தரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. முதல் சுற்றில் சீனா ஒரு கோலும், மலேசியா இரண்டு கோலும் போட்டிருந்தது. அதன் பின்னர், நடந்த சுற்றுகளில் மலேசியா தரமான சம்பவம் செய்ய, சீனாவால் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதியில் மலேசியா 5 கோல்களும் சீனா ஒரு கோலும் போட்டது. இதனால் இந்த தொடரில் இரண்டாவது வெற்றியைப் பெற்ற அணி என்ற பெருமையை மலேசியா பெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் தற்போது முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 


மூன்றாவதாக நடைபெற்ற இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் தலா ஒரு கோல் மட்டுமே போட்டது. இதனால் இந்த போட்டியும் முதல் போட்டியைப் போல் டிராவில் முடிந்தது. இன்றைய நிலவரப்படி,புள்ளிப்பட்டியலில்  மலேசியா அணி முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், சவுத் கொரியா மூன்றாவது இடத்திலும், ஜப்பான் நான்காவது இடத்திலும் உள்ளது.