இந்தியா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றி பெற்றது மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை லீட்சில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் தொடங்க உள்ளது.


லீட்ஸ் மைதானம் இந்திய அணிக்கு மிகவும் ராசியான மைதானம் ஆகும். இந்த மைதானத்தில் இந்திய அணி கடைசியாக விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், கடைசியாக 2002-ஆம் ஆண்டு இந்திய அணி இங்கு டெஸ்ட் ஆடியபோது வரலாற்றுச் சாதனையையும் புரிந்தது.




சச்சின் டெண்டுல்கர், சவ்ரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய மூன்று பேருமே கிரிக்கெட் லெஜண்ட்ஸ். இவர்கள் மூன்று பேரும் இணைந்து ஒரு இன்னிங்சில் சதமடித்தது இந்த லீட்ஸ் மைதானத்தில் மட்டுமே. 2002ம் ஆண்டு சவ்ரவ் கங்குலி தலைமையிலான கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடியது. அப்போது, 4 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியை டிரா செய்தது.


மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற கட்டாயத்தில் இறங்கிய இந்திய அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர் சேவாக் 8 ரன்களில் வெளியேறினாலும் மற்றொரு வீரர் சஞ்சய் பங்கர் 68 ரன்கள் சேர்த்தார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ராகுல் டிராவிட் 307 பந்துகளில் 23 பவுண்டரிகளுடன் 148 ரன்களை குவித்தார். பின்னர், அவருடன் ஜோடி சேர்ந்த மாஸ்டர் பிளாஸ்டர் தனது அதியற்புதமான ஆட்டத்தினால் அவரும் சதம் அடித்தார்.  




ராகுல் டிராவிட் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய இந்திய கேப்டன் சவ்ரவ் கங்குலி ஒருநாள் போட்டிகளில் ஆடுவது போல அதிரடியாக ஆடி ரன்களை சேர்க்கத் தொடங்கினார். அவரது அதிரடியான ஆட்டத்தால் அவரும் சதமடித்தார். கங்குலி 167 பந்துகளில் 14 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 128 ரன்கள் குவித்து வெளியேறினார். மறுமுனையில் நங்கூரமாய் நின்ற சச்சின் டெண்டுல்கர் 330 பந்துகளில் 19 பவுண்டரி 3 சிக்ஸருடன் 193 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி இங்கிலாந்தில் ஒரு இன்னிங்சில் தனது அதிகபட்ச ரன்னாக 628 ரன்களை குவித்து புதிய சாதனை படைத்தது.


சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ராகுல் டிராவிட் மூவரும் இணைந்தே சுமார் 50க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருந்தாலும், மூன்று பேரும் இணைந்து ஒரு இன்னிங்சில் சதமடித்த மைதானம் என்ற பெருமையை பெற்றுத்தந்தது லீட்ஸ் மைதானம் மட்டுமே ஆகும்.




தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணிக்கு ஹர்பஜன் சிங்கும், அனில்கும்ப்ளேவும் மாறி மாறி குடைச்சல் அளித்தனர். ஜாகிர்கான் மற்றும் அஜித் அகர்கரும் இணைந்து சிறப்பாக பந்து வீசியதால் இங்கிலாந்து அணி 273 ரன்களுக்கு சுருண்டு பாலோ ஆன் ஆனது. பாலோ – ஆன் ஆனதால் இரண்டாவது இன்னிங்சை இங்கிலாந்து தொடங்கியது.


இந்த முறை அந்த அணியின் கேப்டன் நாசர் ஹூசைன் மட்டும் போராடினார். ஆனால், இந்த முறை கும்ப்ளே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஜாகீர்கான், அஜித் அகர்கர், சஞ்சய் பங்கர், ஹர்பஜன் சிங் ஆகியோரும் விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு அடுத்த போட்டியை இந்திய அணி டிரா செய்தது. இதன்மூலம் இந்திய அணி அந்த தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.